'இதுதானா அந்த புதிய கோர்-குரூப்???'... 'அப்போ ரெய்னாவின் நிலை?'... 'சந்தேகத்தை வலுவாக்கியுள்ள தோனியின் பேச்சு!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனியின் பேட்டியைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் ரெய்னா இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பிளே ஆப் செல்லாமல் சிஎஸ்கே அணி வெளியேறியுள்ள நிலையில், அடுத்த சீசனுக்கு இப்போதிருந்தே அந்த அணி தயாராகி வருகிறது. 2021 தொடரில் சிஎஸ்கே அணியில் ஆடப் போகும் வீரர்கள் யார் யார் என்பது குறித்த கணிப்புகள், விவாதங்கள் இப்போதே எழ தொடங்கியுள்ளன. இதுகுறித்து தோனியும் சூசகமாக நிறைய விஷயங்களை பேசி வரும் சூழலில், நேற்றைய போட்டிக்குப்பின் அவர் அளித்த பேட்டி சுரேஷ் ரெய்னா அணியில் நீடிப்பாரா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
நேற்று அடுத்த சீசன் பற்றி பேசிய தோனி, "எங்களுடைய அணியின் அடிப்படை அமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். அடுத்த 10 வருடங்களுக்கு ஏற்றபடி அணியை மாற்ற வேண்டும். ஐபிஎல் தொடக்கத்தில் நாங்கள் உருவாக்கிய அணி சிறப்பாக இருந்தது. கோர் குரூப்பை முறையாக உருவாக்கி அதை வைத்து ஆடினேன். தற்போது அதில் நாங்கள் கொஞ்சம் லேசாக மாற்றம் அடைய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
அதாவது சிஎஸ்கே அணியில் மற்ற வீரர்கள் உள்ளே வருவதும், வெளியே அனுப்பப்படுவதும் நடக்கும்போதும், இந்த கோர் குரூப்பில் இருக்கும் வீரர்கள் அணிக்காக நீண்ட வருடங்கள் விளையாடுவார்கள். அதனால் இந்த கோர் குரூப்பில் பொதுவாக எப்போதும் பெரிய அளவில் மாற்றங்கள் நடக்காது. இந்நிலையிலேயே அடுத்த வருடம் நடக்கும் சீசனில் இந்த கோர் குரூப்பில் மாற்றம் செய்ய சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது சிஎஸ்கே அணியில் இருக்கும் தோனி, ஜடேஜா, பிராவோ, டு பிளசிஸ், ரெய்னா போன்ற வீரர்கள் இந்த கோர் குரூப்பை சேர்ந்தவர்களே.
இதையடுத்து சிஎஸ்கேவின் கோர் குரூப்பில் மாற்றம் செய்யப்படும் என தோனி கூறியுள்ளதால், ஏற்கெனவே கோர் குரூப்பில் உள்ள தோனி, ஜடேஜா, டு பிளசிஸ் ஆகியோருடன் சாம் கரன், ரூத்துராஜ் ஆகியோர் புதிதாக இணைய வாய்ப்புள்ளதாகவும், அதில் மீதம் இருக்கும் வீரர்கள் நீக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அதாவது சிஎஸ்கேவின் அடிப்படை அணியில் இருந்து ரெய்னா, பிராவோ நீக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
பிராவோ இரண்டு வருடமாக பார்மில் இல்லாத நிலையில், ரெய்னா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அதனால் அடுத்த வருடம் வந்தால் ரெய்னா தொடர்ச்சியாக ஏறக்குறைய இரண்டு வருடம் கிரிக்கெட் ஆடாத நிலை ஏற்பட்டுவிடும் என்பதால் அவர் அணியில் நீடிப்பது கடினம் எனக் கணிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக அடுத்த 10 வருடங்களுக்கு ஆடப் போகும் அணியை உருவாக்க போவதாக தோனி குறிப்பிட்டுள்ளதால், கண்டிப்பாக அந்த அணியில் ரெய்னா இருக்க மாட்டார் அல்லது அணியில் அவர் இடம் பெற்றாலும் அவருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இருக்காது எனவே கூறப்படுகிறது.