12 வருஷத்துல ஒரு தடவை கூட ‘மிஸ்’ ஆனதில்ல.. ஆனா இந்த சீசன்ல ‘தல’யால அத பண்ணவே முடியாம போச்சு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை அணியின் கேப்டன் தோனி இந்த வருட ஐபிஎல் தொடரில் மோசமான சாதனையை படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தோனி கடைசியாக 2019 உலகக்கோப்பை தொடரின் அரை இறுதிப்போட்டியில் விளையாடி இருந்தார். அதன்பின் எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. இந்தநிலையில் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வை அறிவித்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பல மாதங்கள் கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை. இதனை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பின் ஐபிஎல் தொடரில் தோனி விளையாட வந்தார். இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. சர்வதேச கிரிக்கெட்டில் இனி தோனியை பார்க்க முடியாது என்பதால், ஐபிஎல் தொடரில் தோனியின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.
ஆனால் இந்த வருடம் ஐபிஎல் சீசனில் தோனி பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. பேட்டிங்கில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தார். முன்புபோல அதிரடி ஆட்டத்தை அவரால் ஆடமுடியவில்லை. இதற்குமுன் தோனி பங்கேற்ற 12 ஐபிஎல் சீசன்களில் அரைசதம் அடித்துள்ளார். ஆனால் இந்த சீசனில் தான் முதன்முறையாக ஒரு அரைசதம் கூட அடிக்காமல் தோனி இருந்துள்ளார்.
இந்த வருடம் 12 இன்னிங்க்ஸில் 199 ரன்கள் மட்டுமே தோனி எடுத்துள்ளார். அவரது சராசரி 28.42. இந்த சீசனில் அவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் 47 ரன்கள் தான். ஒரு சில போட்டிகளில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனாலும் பேட்டிங்கை பொறுத்தவரை இது அவருக்கு மோசமான சீசன்.
மேலும் முதல்முறையாக சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது. இந்த சீசன் ஏமாற்றம் அளித்தாலும் அடுத்த ஆண்டு வலிமையுடன் வருவோம் என தோனி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
