‘ஐபிஎல் மெகா ஏலம்’.. ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்..? கசிந்த தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ஏலத்துக்கு முன் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 2022-ம் ஆண்டு முதல் 2 புதிய ஐபிஎல் (IPL) அணிகள் இணைக்கப்பட உள்ளன. அதில் குஜராத் மாநிலத்தை மையமாகக் கொண்டு அகமதாபாத் அணியும், உத்தரப்பிரதேச மாநிலத்தை மையமாகக் கொண்டு லக்னோ அணியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அணிகளுக்கான ஏலம் சமீபத்தில் துபாயில் நடைபெற்றது.
ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக 2 அணிகள் இணைவதால், அனைத்து அணியிலும் உள்ள வீரர்கள் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. அதனால் ஏலத்துக்கு முன்பு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என கேள்வி எழுந்து வந்தது.
இந்த நிலையில் ESPNcricinfo ஊடகம் இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏலத்துக்கு முன்னர், ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 3 இந்திய வீரர்களும் 1 வெளிநாட்டு வீரரும் அல்லது 2 இந்திய வீரர் மற்றும் 2 வெளிநாட்டு வீரர் என தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் புதிதாக இணைக்கப்பட்டுள்ள இரண்டு அணிகள் 3 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ஏற்கனவே உள்ள 8 அணிகள் தங்களது வீரர்களை தக்க வைத்தபின், மீதமுள்ள வீரர்களில் யாரேனும் 3 வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 2 இந்திய வீரர்கள், 1 வெளிநாட்டு வீரர் என தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஐபிஎல் நிர்வாகம் இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.