புதிய அணிகளுக்காக ஐபிஎல் ஏலத்தில் மாற்றம்..? இப்படி நடந்தா மற்ற அணிகளுக்கு ‘ஆப்பு’ தான்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் வீரர்கள் ஏலம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற்று வரும் 14-வது சீசன் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதிபோட்டி இன்று (15.10.2021) இரவு 7:30 மணிக்கு துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியும் மோதுகின்றன.
இந்த ஆண்டுடன் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. மேலும் அடுத்த ஆண்டு முதல் இரண்டு புதிய அணிகளை பிசிசிஐ இணைக்க உள்ளது. அதனால் தற்போது ஒரு அணியில் உள்ள வீரர்கள் வேறு அணிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏலத்தில் பிசிசிஐ புதிய முறையை செயல்படுத்த உள்ளதாக Cricbuzz ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக, புதிதாக இணையவுள்ள 2 அணிகள், தங்களுக்கு வேண்டிய வீரர்களை வாங்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏலத்தில் பங்கேற்பதற்காக விண்ணபிக்கும் வீரர்களை, ஏலத்துக்கு முன்னதாகவே அந்த அணிகள் வாங்கிக் கொள்ளலாம்.
சம்பந்தப்பட்ட வீரரும், அந்த அணி நிர்வாகமும் ஆலோசனை நடத்தி ஊதிய தொகையை முடிவு செய்து கொள்ளலாம். ஆனாலும் எத்தனை வீரர்களை முன்கூட்டியே வாங்கிக் கொள்ளலாம் என குறிப்பிடப்படவில்லை. அதில் 3 முதல் 4 வீரர்கள் வரை வாங்கிக் கொள்ளலாம் என தெரிகிறது. ஒவ்வொரு அணிகளும் தங்களது முக்கியமான வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முனைப்பு காட்டி வரும் சூழலில், ஏலத்துக்கு முன்பாகே புதிய அணிகள் வீரர்களை வாங்குவது மற்ற அணிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.