மீண்டும் தொடங்கும் ஐபிஎல்!.. சந்தோஷப்படுறதா? கவலப்படுறதா?.. ரண வேதனையில் கொல்கத்தா அணி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் செப்டம்பரில் நடைபெறுவதாக அறிவித்துள்ள நிலையில் கொல்கத்தா அணியில் பெரிய மாற்றம் நிகழவிருக்கிறது.
கொரோனாவால் தடைபட்டுள்ள ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 10ம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது. சௌரவ் கங்குலி தலைமையில் இன்று நடைபெற்ற பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் செப்டம்பர் - அக்டோபர் கால இடைவெளியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் விதமாக அனைத்து அணிகளும் சர்வதேச போட்டிகளை திட்டமிட்டுள்ளது.
அந்தவகையில், ஐபிஎல் நடக்கவிருக்கும் நாட்களில் இங்கிலாந்து அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதனால் வீரர்கள் தாய்நாட்டிற்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என இங்கிலாந்து வாரியம் ஏற்கனவே கூறிவிட்டது.
இங்கிலாந்தின் இந்த அறிவிப்பால் கொல்கத்தா அணிக்கு தான் பெரிய பாதிப்பு ஆகும். ஏனெனில், கொல்கத்தா அணியின் கேப்டன் இங்கிலாந்து வீரர் இயான் மோர்கன் ஆவார். இதனால் அந்த அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டியுள்ளது. இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஏற்கனவே கேப்டனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.
மோர்கனுக்கு அடுத்ததாக அணியை வழிநடத்த துணை கேப்டனாக இருக்கும் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம், கம்பீருக்கு பிறகு தினேஷ் கார்த்திக் தான் கொல்கத்தா அணியை வழிநடத்தி வந்தார். ஆனால் அவரின் தலைமையில் அந்த அணி பெரிதாக சோபிக்கவில்லை.
அவர் வழிநடத்திய 37 போட்டிகளில் 21 வெற்றிகளே கிடைத்துள்ளது. இதனால் 2020ம் ஆண்டு ஐபிஎல்-ன் பாதியிலேயே கேப்டன் மாற்றப்பட்டார். இந்நிலையில் மீண்டும் தினேஷ் கார்த்திக்கிற்கே அந்த பதவி போகும் என தெரிகிறது.
கொல்கத்தா அணி பேட் கம்மின்ஸை கேப்டனாக நியமிக்கவும் வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய அணி கம்மின்ஸ் தற்போது ஆஸ்திரேலியாவின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக உள்ளார். இதனால் கம்மின்ஸை சோதித்து பார்க்க அடுத்து உள்ள 7 போட்டிகளுக்கும் அவரையே கேப்டனாக நியமிக்கவும் வாய்ப்புள்ளது. அப்படி அவருக்கு வாய்ப்பு சென்றால் எதிர்காலத்திலும் அதுவே நீடிக்கலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.