தோனிக்கு அப்றம் ‘கோலிக்கு’ தான் இப்டி நடந்திருக்கு.. ‘அவர்’ வந்தாலே மனுஷன் அவுட் ஆகிறாப்ல பாவம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் ஒரே பந்துவீச்சாளரிடம் விராட் கோலி 7 முறை அவுட்டாகி உள்ளார்.
ஹைதராபாத் மற்றும் பெங்களூருக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜோஷ் பிலிப் 32 ரன்களும், டிவில்லியர்ஸ் 24 ரன்களும், வாஷிங்க்டன் சுந்தர் 21 ரன்களும் எடுத்தனர்.
ஹைதராபாத் அணியை பொருத்தவரை சந்தீப் ஷர்மா 2 விக்கெட்டுகள், ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகள், தமிழக வீரரான நடராஜன் மற்றும் ஷாபாஸ் நதீம், ரஷித் கான் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதில் சந்தீப் ஷர்மா பவர் பிளே ஓவர்களில் தேவ்தத் படிக்கல், விராட் கோலி என இரண்டு முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.
இப்போட்டியில் 7 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 7 ரன்கள் மட்டுமே எடுத்து சந்தீப் ஷர்மாவின் ஓவரில் அவுட்டானார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் 7-வது முறையாக சந்தீப் ஷர்மாவிடம் கோலி அவுட்டாகியுள்ளார். அவரது பந்துவீச்சில் மொத்தமாக 68 ரன்கள் மட்டுமே கோலி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 12 இன்னிங்ஸில் 7 முறை சந்தீப் ஷர்மாவின் ஓவரில் விராட் கோலி அவுட்டாகி உள்ளார். ஐபிஎல் தொடரில் 7 முறை ஒரு பேட்ஸ்மேனை ஒரே பந்து வீச்சாளர் வீழ்த்துவது இது 2-வது முறையாகும். முன்னதாக ஜாகிர் கான் பந்துவீச்சில் சிஎஸ்கே கேப்டன் தோனி 7 முறை ஆட்டமிழந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.