‘இனிமேல் இப்டி நடக்காதுனு நம்புறோம்’.. சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்ட பிரபல வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 30, 2019 05:53 PM
பல பெண்களுடன் சேட்டிங் செய்தது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக் மன்னிப்பு கேட்டுள்ளார்.

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அஹமது மீது பல்வேறு விமர்சனங்கள் விழுந்தன. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக சமீபத்தில் புதிய சர்ச்சை வெடித்தது. அதில், இளம்பெண் ஒருவர் இமாம் தனக்கு அனுப்பிய மெசேஜ்களை க்ரீன்சாட் எடுத்து டுவிட்டரில் மீடு ஹேஸ்டேக்குடன் பதிவிட்டார். இது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பதில் ஏதும் தெரிவிக்காமல் இமாம் மௌனம் காத்துவந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இமாம் மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குனர் வாசிம் கான் தெரிவித்துள்ளார். மேலும், ‘இது அவரின் தனிப்பட்ட விவகாரமாக இருந்தாலும், வீரர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். நாட்டுக்காக விளையாடும் வீரர்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது. இனிமேல் இதுபோன்று நடக்காது என நம்புகிறோம்’ என வாசிம் கான் தெரிவித்துள்ளார்.
