‘என்னோட கடைசி போட்டியை விளையாட போறேன்’.. ‘எனக்காக வந்து பாருங்க’.. தெரிவித்த பிரபல வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 24, 2019 05:58 PM
டி20 உலகக்கோப்பைத் தொடரில் விளையாட உள்ளதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இலங்கை அணியிக்கு ஏராளமான வெற்றிகளை தேடி தந்துள்ளார். இந்நிலையில் இலங்கை அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி வரும் 26 -ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியுடன் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து மலிங்கா ஓய்வு பெற உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில்,‘வரும் வெள்ளிக்கிழமை என்னுடைய கடைசி ஒருநாள் போட்டியை விளையாட உள்ளேன். முடிந்தால் எனக்காக நேரில் வந்து பாருங்கள். அடுத்த வருடம் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணியில் இடம் கிடைக்கும் என நம்புகிறேன். ஆனால் என்னை விட சிறந்த வீரர்கள் அணியில் இருக்கலாம். அணியில் இருந்து வெளியேறுவது குறித்து நான் ஏதும் பொருட்படுத்தவில்லை’ என மலிங்கா தெரிவித்துள்ளார்.
