‘அப்பெல்லாம் அமைதியா இருந்திட்டு.. இப்போ மட்டும் ஏன் குறை சொல்றீங்க..?’.. சிஎஸ்கே பேட்டிங் கோச்சை விளாசிய கவாஸ்கர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடத்துவது தொடர்பாக சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி கூறிய கருத்துக்கு சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற 14-வது சீசன் ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து பிசிசிஐ இந்த முடிவை எடுத்தது. இதனால் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ நேற்று தெரிவித்தது.
இந்த சூழலில் இந்தியாவில் டி20 உலகக்கோப்பை நடத்தவேண்டாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், டி20 உலகக்கோப்பையை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி ஐசிசி ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹசி, டி20 உலகக்கோப்பை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘ஐபிஎல் தொடரில் 8 அணிகளே விளையாடி வருகின்றன. ஆனாலும் கொரோனா தாக்கியது. டி20 உலகக்கோப்பையில் அதற்கும் அதிகமான அணிகள் பங்கேற்கும். இதற்காக பல நகரங்களில் மைதானங்கள் பயன்படுத்தப்பட வேண்டியிருக்கும், வீரர்களை பல இடங்களுக்கு பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும். இதுதான் மிகப்பெரிய சவால். என்னைப் பொறுத்தவரை டி20 உலக்கோப்பையை நடத்த ஐக்கிய அரபு அமீரகத்தைபோல் ஒரு நாட்டை தேர்வு செய்ய வேண்டும். உலகின் பல நாடுகள் இந்தியாவுக்கு சென்று விளையாட தயக்கம் காட்டுகின்றன’ என மைக் ஹசி தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ‘ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா விளையாடியபோது அங்கும் கொரோனா பாதிப்பு அதிகமாகதான் இருந்தது. அதற்காக தொடரை நிறுத்தவில்லை. அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு அப்போது பணம்தான் முக்கியமாக இருந்தது. அதேபோல் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகூட கொரோனாவுக்கு மத்தியில்தான் நடைபெற்றது. அதனால் கொரோனாவை ஒரு காரணமாக கூறவேண்டாம்.
இந்தியாவில் டி20 உலகக்கோப்பை நடக்கக்கூடாது என யாரும் நினைக்காதீர்கள். ஆகஸ்ட் மாதம் வரை இந்தியாவில் இருக்கும் நிலைமை பார்ப்போம். அப்போதும் நிலைமை சரியாகவில்லை என்றால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்திக் கொள்ளலாம். ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு இருந்தபோதும் அங்கு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. ஆனால் அவர்கள் தற்போது இந்தியாவை குறைகூறுவது ஆச்சரியமாக உள்ளது’ என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.