'ஐபிஎல்' வரை காத்திருக்கவா?.. உலகின் 'நம்பர் 1' ஆல்ரவுண்டர்.. சிக்கியது இப்படித்தான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Oct 30, 2019 01:07 PM
உலகின் நம்பர் 1 ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசனுக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டுகள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. இந்தியா-வங்காள தேசம் இடையிலான போட்டிகள் நெருங்கி வரும் வேளையில் இந்த தடை அமலுக்கு வந்திருப்பது வங்கதேச அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

சூதாட்ட தரகர் ஒருவர் ஷாகிப்பை அணுகியதை கண்டறிந்த ஐசிசி இதுகுறித்து ஷாகிப்பிடம் விசாரணை நடத்தியது. தரகர் தன்னை அணுகியதை ஷாகிப் ஒப்புக்கொண்டுள்ளார். தரகரின் கோரிக்கைக்கு ஷாகிப் செவி சாய்க்கவில்லை என்றாலும் இதுகுறித்து ஐசிசியிடம் அவர் தெரிவிக்கவில்லை என்பதால் 2 ஆண்டுகள் தடை விதிப்பதாக ஐசிசி அறிவித்தது.ஆனால் ஷாகிப் தனது தவறை ஒத்து கொண்டிருப்பதால் தண்டனையை ஓராண்டுகளாக ஐசிசி குறைத்துள்ளது.
இந்தநிலையில் ஷாகிப்புக்கு அந்த தரகர் அனுப்பிய வாட்ஸ் அப் சாட்களை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் முதன்முறையாக நவம்பர் 4 -12 தேதிகளில் 2017- ஆண்டு அந்த தரகர் ஷாகிப்பை அணுகியுள்ளார். அப்போது ஷாகிப் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் டாக்கா டைனமைட்ஸ் அணிக்காக விளையாடினார். தீபக் அகர்வால் என்ற அந்த தரகர் ஷாகிப்பை அணுகி மற்ற வீரர்களின் எண்கள் தனக்கு கிடைக்குமா? என்று கேட்டுள்ளார். ஷாகிப் அப்போது தன்னுடைய நம்பரை வேறு ஒருவர் அந்த தரகருக்கு வழங்கியிருப்பதை தெரிந்து கொண்டார்.
எனினும் ஷாகிப் அவருக்கு எந்த எண்களையும் வழங்கவில்லை. ஆனால் தொடர்ந்து அந்த தரகர் ஷாகிப்பிடம் உரையாடி நெருக்கத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார். தொடர்ந்து ஜனவரி 2018-ம் ஆண்டு இந்தியா, இலங்கை, வங்காள தேசம் அணிகள் விளையாடிய முத்தரப்பு தொடரின்போதும் அவர் ஷாகிப்பை அணுக முயற்சி செய்துள்ளார். 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஷாகிப் அன்றைய தினம் நடந்த போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அகர்வால் அவருக்கு வாழ்த்து சொல்லி மெசேஜ் அனுப்பினார்.
தொடர்ந்து நாங்கள் இதில் வேலை செய்கிறோமா? இல்லை ஐபிஎல் வரை காத்திருக்கவா? என்று அந்த சூதாட்ட தரகர் ஷாகிப்பிடம் கேட்டார். வேலை செய்கிறோம் என்றால் அதன் உட்பொருள் சூதாட்டம் என்பதாகும். இதேபோல ஜனவரி 23-ம் தேதி இந்த தொடரில் இருக்கிறதா? என்று கேட்டு இருக்கிறார். எனினும் இதுகுறித்து ஷாகிப் ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவிடம் புகார் அளிக்கவில்லை.
2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ம் தேதி சன்ரைசர்ஸ் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. அந்த போட்டிக்கு முன் ஷாகிப்புக்கு மெசேஜ் செய்த தரகர் ஒரு குறிப்பிட்ட வீரர் அன்று விளையாட போகிறாரா? என்று கேட்டிருந்தார். மேலும் பிட்காயின்கள், டாலர்கள் பற்றி ஷாகிப்பிடம் அவர் பேசி, உரையாடலை தொடர்ந்துள்ளார். அப்போது தான் அவர் ஒரு சூதாட்ட தரகராக இருக்கலாம் என்ற உணர்வு ஷாகிப்புக்கு எழுந்துள்ளது.
அந்த தரகருக்கு எந்தவொரு தகவலையும் ஷாகிப் கசியவிடவில்லை என்றாலும் இதுகுறித்து முன்பே ஐசிசியிடம் சொல்லாமல் விட்டதால் தான், ஷாகிப்புக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
