"மொத்தமா ஒடஞ்சு போயி உக்காந்து இருந்தேன்.. அப்போ, 'கோலி' தான் எனக்கு 'தைரியம்' குடுத்தாரு.. அவரு மட்டும் இல்லன்னா.." நெகிழ்ந்து போன 'இளம்' வீரர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் எதிர்கொள்ளவுள்ள நிலையில், இதற்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில், இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் (Mohammad Siraj) இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில், பெங்களூர் அணிக்காக ஆடியதன் மூலம் பிரபலமான சிராஜ், குறுகிய ஓவர் போட்டிகளில் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தாலும், கடந்த ஆண்டு இறுதியில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானது அவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த தொடரில், 3 போட்டிகளில் விளையாடி, 13 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியிருந்தார்.
ஆனால், இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக சிராஜ் ஆஸ்திரேலியா போயிருந்த சமயத்தில், அவரது தந்தை உயிரிழந்தார். தான் கிரிக்கெட் உலகில் சாதிக்க வேண்டும் என்பதை தன்னை விட அதிகமாக கனவு கண்ட தந்தையின் மரணம், சிராஜை நொறுக்கியது.
தொடர்ந்து, இந்தியா வராத சிராஜ், அந்த தொடரில் சிறப்பாக பந்து வீசி, அதனை தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதாக கூறி அதனை அவர் செய்தும் காட்டினார். தொடர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் என இரண்டிலும் சிராஜ் தேர்வாகியுள்ள நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
இதில் பேசிய சிராஜ், 'ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் எனக்கு அதிக தன்னம்பிக்கையை கொடுத்தது. அதே தன்னம்பிக்கையுடன் தற்போது இங்கிலாந்தில் பயணம் செய்யவும் தயாராகி வருகிறேன். எனது பயணத்தில், அனைத்து நேரங்களிலும் கோலி (Kohli) என்னுடன் இருந்தார். அவர் என்னிடம் எப்போதும் சொல்லும் ஒரே விஷயம், "எந்த ஒரு பேட்ஸ்மேனையும் அவுட்டாக்கும் திறமை உன்னிடம் இருக்கிறது" எனக் கூறுவார்.
சமீபத்தில், ஐபிஎல் தொடரில், சென்னை அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு என்னிடம் பேசிய கோலி, "பந்து வீச்சில் நீ காட்டிய மாற்றங்கள் ஆச்சரியமளிக்கிறது. நிச்சயம் இது நமது அணிக்கு பலம் சேர்க்கும். இங்கிலாந்து தொடருக்காக தயாராகிக் கொள்" என்று அறிவுறுத்தினார். உலகத்தின் சிறந்த கேப்டன் ஒருவரிடம் இருந்து வரும் இப்படிப்பட்ட வார்த்தைகள், என்னை அதிகம் ஊக்குவித்தது' என்றார்.
தொடர்ந்து, தந்தையின் மரணத்தின் போது, கோலி தனக்கு ஆறுதல் கூறியதைப் பற்றி பேசிய சிராஜ், 'ஆஸ்திரேலிய தொடரின் போது எனது தந்தை மரணமடைந்ததை அறிந்து, அறையில் இருந்து தனியாக அழுது கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் சுக்கு நூறாக உடைந்து போயிருந்த எனக்கு, கோலி தான் அதிக வலிமையும், ஆதரவும் கொடுத்தார். என்னிடம் வந்த கோலி, "நான் உன்னுடன் இருக்கிறேன், கவலைப்படாதே" என என்னைத் தேற்றினார். அந்த தொடரில், ஒரே ஒரு போட்டியுடன் கோலி கிளம்பி விட்டார்.
ஆனால், அவர் தொடர்ந்து எனக்கு அனுப்பிய மெசேஜ் மற்றும் அழைப்புகள், என்னை அந்த தொடரில் சிறப்பாக பந்து வீச உதவியது. பெங்களூர் அணிக்காக, கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் நான் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனாலும், கோலி எந்த சமயத்திலும் என்னுடன் ஆதரவாக இருந்து, என்னை அதிகம் தேற்றியுள்ளார். என்னுடைய கிரிக்கெட் கேரியர் முழுவதும் நான் கோலிக்கு கடமைப்பட்டிருக்கிறேன்' என நெகிழ்ந்து போய் சிராஜ் பேசியுள்ளார்.

மற்ற செய்திகள்
