‘அப்பவே தெளிவா சொல்லிட்டேன்’!.. மறுபடியும், மறுபடியும் கேட்டா என்ன அர்த்தம்.. நிருபர் கேட்ட கேள்வி.. செம ‘கடுப்பான’ கோலி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 இந்திய அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறித்து நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்வியால் விராட் கோலி கோபமடைந்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரின் இன்றைய (24.10.2021) போட்டியில் விராட் கோலி (Virat Kohli) தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் (Babar Azam) தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. துபாய் (Dubai) மைதானத்தில் இரவு 7:30 மணியளவில் தொடங்க உள்ள இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இந்த டி20 உலகக்கோப்பை தொடருடன், இந்திய டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பல வரலாற்று வெற்றிகளை பெற்றாலும், இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்றதில்லை. இதுதான் அவர் மீது ஒரு விமர்சனமாக வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், அரையிறுதிப்போட்டியில் நியூஸிலாந்திடம் தோல்வியடைந்து வெளியேறியது. அதேபோல் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. ஆனால் அப்போட்டியிலும் நியூஸிலாந்திடம் கோப்பையை இந்தியா பறிகொடுத்தது.
அதேபோல் ஐபிஎல் (IPL) தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, இதுவரை ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றியதில்லை. அதனால் அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் இந்த ஆண்டுடன் விலகுவதாக விராட் கோலி அறித்தார். அடுத்தடுத்து இந்திய டி20 அணி மற்றும் ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி கலந்துகொண்டார். அப்போது நிருபர் ஒருவர், ‘அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாகதான் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக செய்தி பரவி வருகிறது, அது உண்மைதானா?’ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த விராட் கோலி, ‘ஏன் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன் என்பதற்கான காரணத்தை ஏற்கனவே நான் கூறிவிட்டேன். என்னால் முடிந்த அளவிற்கு அதற்கு தெளிவாக விளக்கமும் கொடுத்துவிட்டேன். இதன்பின்பும் என்னை விமர்சிப்பவர்கள் பற்றி எனக்கு கவலை இல்லை.
இப்போது டி20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் மட்டும்தான் எனது கவனம் உள்ளது. அதனால் இதுதொடர்பான கேள்வியை மட்டும் கேளுங்கள்’ என விராட் கோலி சற்று கோபமாக கூறினார். பணிச்சுமை காரணமாகவே கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி முன்பே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
