இந்த தடவை டி20 உலகக்கோப்பையை இந்தியா தான் ‘வின்’ பண்ண போறாங்க.. சொன்னது யாருன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள நாடு குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடர் நடைபெற்று வருகிறது. வரும் 24-ம் தேதி துபாய் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு இரண்டு அணிகளும் மோதவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், டி20 உலகக்கோப்பையை எந்த நாடு கைப்பற்ற உள்ளது என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் (Inzamam ul Haq) தனது கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘எந்த ஒரு கிரிக்கெட் தொடரிலும் குறிப்பிட்ட ஒரு அணிதான் வெற்றி பெறும் என்றும், கோப்பையை கைப்பற்றும் என்றும் கூற முடியாது. எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்று வேண்டுமானால் கூற முடியும். அப்படி பார்க்கும்போது மற்ற அணிகளை விடவும் இந்தியாவுக்குதான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.
அதற்கு காரணம், ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் இந்திய வீரர்கள் தற்போதுதான் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், இந்திய அணியில் பல அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அவர்களால் இக்கட்டான சூழலில் கூட சிறப்பாக விளையாட முடியும். பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்திய விதம்தான், இந்த தொடரில் அவர்கள் எப்படி விளையாட உள்ளனர் என்பதற்கு ஓர் உதாரணம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 153 ரன்களை சேசிங் செய்யும்போது விராட் கோலி போன்ற அதிரடி வீரர் இல்லாமலேயே எளிதாக இந்தியா வென்றுவிட்டது. இதை வைத்து பார்க்கும்போது இந்தியா நிச்சயம் டி20 உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது என தெரிகிறது’ என இன்சமாம் உல் ஹக் கூறியுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன், தங்கள் நாட்டை கூறாமல் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என கூறியது இந்திய ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.