‘அந்த சம்பவத்துக்கு அப்புறம் 3 வருசம் அவர் என்கிட்ட பேசல’!.. சிஎஸ்கே முன்னாள் வீரருடன் நடந்த சண்டை.. பல வருட சீக்ரெட்டை உடைத்த ராபின்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹேய்டனுடன் சண்டையிட்டது குறித்து ராபின் உத்தப்பா பகிர்ந்துள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற அப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து தோனி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் ஒரு டி20 தொடர்களில் விளையாடியது.
உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவிடம் தோற்ற கோபத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பின் நடந்த இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில், இந்திய அணியினரைத் தொடர்ந்து சீண்டி வந்தது. பேட்ஸ்மேன்களுக்கு அடிக்கடி பவுன்சர்கள் வீசுவது, தேவையில்லாமல் இந்திய வீரர்களை இடிப்பது என அந்த தொடர் முழுவதும் இப்படியே இருந்தது.
அப்போது ஒருநாள் போட்டி ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேய்டன் இடையில் சீண்டல் அதிகமாக இருந்தது. அப்போட்டியில் பேட்டிங் செய்துகொண்டிருந்த ராபின் உத்தப்பாவை ஹேய்டன் தொடர்ந்து சீண்டிக்கொண்டிருந்தார். இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யும்போது உத்தப்பாவும் ஹேய்டனை சீண்டினார். இதனால் உத்தப்பாவிடம் ஹேய்டன் மூன்று வருடங்களாகப் பேசவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்த உத்தப்பா இந்த சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ‘அந்த தொடரை என்னால் மற்ற முடியாது. இரு அணியினரும் மாறிமாறி சீண்டலில் ஈடுபட்டோம். நான் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது ஹேய்டன் என்னைச் சீண்டும் வகையில் செயல்பட்டார். மற்ற ஆஸ்திரேலிய வீரர்களும்தான். அதேபோல் ஹேய்டன் பேட்டிங் செய்தபோது நானும் சீண்டினேன்.
அப்போது அவர் என்னைப் பார்த்து ஏதோ சொன்னார். ஆனால் அது எனக்கு சரியாகக் கேட்கவில்லை. போட்டி முடிந்தபின் அவரிடம் பேச முயன்றேன். ஆனால், அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். அதன்பின் 2-3 வருடங்களாக அவர் என்னிடம் பேசவில்லை. இது வருத்தமான விஷயம்தான். ஆனால் இப்போது நாங்கள் இருவரும் பேசிக்கொள்வோம்’ என ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக மேத்யூ ஹேய்டன் விளையாடியுள்ளார். அதேபோல் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் ராபின் உத்தப்பா இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.