"எத்தனை காலத்துக்கு நான் விளையாடிட்டே இருக்க முடியும்"?.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நேரத்தில்... ஷாக் கொடுத்த ஷமி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுகமது ஷமி சமீபத்தில் பேசியுள்ள வார்த்தைகள் அவர் ஓய்வு பெறப்போகிறாரா என்ற அச்சத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் சீனியர் பவுலரான முகமது ஷமி கடந்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் அதன் பின்னர் நடைபெற்ற இங்கிலாந்து தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.
இதற்கிடையே, கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேல் ஓய்வில் இருந்த அவர் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பினார். இதன் காரணமாக அடுத்து வரவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த போட்டி குறித்து பேசிய அவர், "இந்திய அணி சமீப காலமாக டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எந்தவித அழுத்தங்கள் இன்றி விளையாடலாம். கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து பெற்ற வெற்றிகள் வீரர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதனால், இங்கிலாந்து சுற்றுப்பயணம் மிகச்சிறப்பானதாக இருக்கும்" எனத்தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு பல வருடங்களாக கிரிக்கெட் விளையாடி அனுபவம் உள்ளது. நான் எப்போதும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டே இருக்கப்போவதில்லை. ஒரு முடிவு உள்ளது. எனவே, எனக்கு தெரிந்த விஷயங்களை இளம் வீரர்களுக்கு கற்றுக்கொடுக்க விரும்புகிறேன். தற்போது அவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கி வருகிறேன்" எனக்கூறியுள்ளார். இது ஷமி ஓய்வு பெறப்போகிறாரா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
30 வயதாகும் முகமது ஷமி இதுவரை 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 180 விக்கெட்களை எடுத்து அசத்தியுள்ளார். அதே போல 79 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 148 விக்கெட்களும், டி20 கிரிக்கெட்டில் 12 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்களையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

மற்ற செய்திகள்
