‘அவரை பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?’.. கோலியை சீண்டிய வாகனுக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த பதிலடி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிராட் கோலியை விமர்சனம் செய்த மைக்கேல் வாகனுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பதிலடி கொடுத்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதவுள்ளன. இந்த நிலையில் நியூஸிலாந்து ஊடகம் ஒன்றிக்கு பேட்டிளித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், விராட் கோலியை கேன் வில்லியம்சனுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.
அதில், ‘மூன்று விதமான கிரிக்கெட் பார்மெட்டிலும் இந்திய அனியின் கேப்டன் விராட் கோலியை விட நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்தான் சிறந்தவர். ஆனால் சமூக வலைத்தளங்களில் கோலிக்கு கிடைத்த ஆதரவு, கேன் வில்லியம்சனுக்கு கிடைக்கவில்லை. கேன் வில்லியம்சன் மட்டும் இந்தியாவுக்காக விளையாடி இருந்தால், உலகத்திலேயே சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்திருப்பார்’ என மைக்கேல் வாகன் கூறினார்.
வாகனின் இந்த விமர்சனத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ‘உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்டுள்ள நாட்டை சேர்ந்தவர் விராட் கோலி. அதனால் அவருக்கு அதிகளவில் ரசிகர்கள் கூட்டம் இருப்பது இயல்பான ஒன்று. மேலும் அவர் சிறந்த கிரிக்கெட் வீரர். அதனை பலமுறை அவர் நிரூபித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் 70 சதங்கள் அடித்துள்ளார். இன்றைய சமகால கிரிக்கெட்டில் இந்த சாதனையை எந்த வீரரும் செய்யவில்லை.
சர்வதேச கிரிக்கெட்டின் பேட்டிங் தரவரிசையிலும் அவர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அதனால் விராட் கோலியை மற்றவர்களுடன் ஒப்பிட முடியாது. இவை அனைத்திற்கும் மேலாக இதை சொல்லும் மைக்கேல் வாகன், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்’ என சல்மான் பட் கூறியுள்ளார்.