ஐபிஎல் நடத்துறதுக்கு... 'இத' விட 'சூப்பர் சான்ஸ்' கிடைக்காது!.. செம்ம ஆஃபர்!.. பிசிசிஐ அவசர மீட்டிங்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கையில் ஐபிஎல் தொடர் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருப்பதாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கடும் பாதுகாப்பையும் மீறி, பயோ - பபுளை உடைத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வருண் சக்கரவர்த்தியை கொரோனா தாக்க அரண்டு போனது பிசிசிஐ.
தொடர்ந்து பல வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட, ஐபிஎல் 2021 தொடர், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், பல வெளிநாட்டு வீரர்கள் மாலத்தீவு அழைத்துச் செல்லப்பட, இந்திய வீரர்கள் உடனடியாக வீடு திரும்பினர்.
இந்த நிலையில், மீதமுள்ள 31 ஆட்டங்களை எங்கு நடத்துவது என்பதை தீர்மானிப்பதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கில் புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்படுவதால், மீண்டும் இங்கு ஐபிஎல் தொடங்க வாய்ப்பே இல்லை. பிசிசிஐ தலைவர் கங்குலியும் அதை உறுதிப்படுத்திவிட்டார்.
இதில், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, இலங்கையில் மீதமுள்ள போட்டிகளை நடத்த அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இலங்கையில் தொடரை நடத்துவதற்கான 5 சாதகமான காரணங்கள் தெரியவந்துள்ளன.
இந்தியாவின் கால நேரமும், இலங்கையின் கால நேரமும் GMT+5:30 hours என்பதால், இந்தியாவில் போட்டிகளை நடத்திய அதே நேரத்திற்கே இலங்கையிலும் நடத்தலாம். இந்தியாவில் டிவியில் அதை பார்ப்பவர்களும், தங்களது வழக்கமான கால நேரத்தில் பார்க்கலாம். இங்கிலாந்தில் போட்டிகள் நடத்தப்பட்டால், இரவு 7.30 மணிக்கு அங்கு போட்டி தொடங்குகிறது என்றால், இந்திய நேரப்படி நாம் இரவு 1 மணிக்கு போட்டியை பார்க்க நேரிடும்.
எனவே, இலங்கையில் தொடரை நடத்துவதன் மூலம் பி.சி.சி.ஐ மற்றும் ஐ.பி.எல் 2021 ஸ்பான்சர்கள் இந்திய தொலைக்காட்சியில் பிரைம் டைம் ஸ்லாட்டை அதிகம் பயன்படுத்த முடியும்.
அதேபோல், இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய பி கிரிக்கெட் அணி, அங்கு மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர் ஜுலை 13ம் தேதி தொடங்குகிறது. இதற்கான பயோ-பபுளில் இந்திய வீரர்கள் இருக்க வேண்டும் என்பதால், ஐபிஎல் அங்கு நடத்தப்பட்டால், அவர்களுக்கு இலங்கையின் நெறிமுறைகள் குறித்த எச்சரிக்கை உணர்வு இருக்கும். அந்த சூழலுக்கு ஏற்ப வீரர்கள் தங்களை தகவமைத்துக் கொண்டு தயாராக இருப்பார்கள்.
அதுமட்டுமின்றி, வரும் ஜுலை - ஆகஸ்ட் மாதங்களில் லங்கா பிரிமியர் லீக் தொடங்குவதால், அங்கு ஏற்கனவே ஸ்டேடியங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதால், தேவையில்லாத கடைசி நேர டென்ஷன்கள் குறைய வாய்ப்புள்ளது.
மேலும், இலங்கையில் ஸ்டேடியங்களுக்கு இடையேயான பயண தூரத்தை கடக்க விமானங்களை பயன்படுத்த தேவையில்லை. சாலை வழியில் பேருந்தில் சென்றாலே போதும். எனவே, விமான நிலையம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதால், வைரஸ் தொற்று பாதிப்பை குறைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கும். ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும், வீரர்கள் தங்கள் அணி பேருந்திலேயே பயணம் செய்துவிடலாம்.
சவுரவ் கங்குலி தலைமையிலான பி.சி.சி.ஐ, ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரை நடத்துவதற்காக 98.5 கோடி ரூபாய் செலவிட வேண்டியிருந்தது. மேலும், பெண்கள் ஐபிஎல் டி20 தொடரை நடத்த எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் 2.52 கோடி ரூபாய் வசூலித்தது. இரண்டையும் சேர்த்து செலவு 100 கோடியைத் தாண்டியது.
அதேபோல், கடந்த ஆண்டு வழக்கமான கோவிட் -19 சோதனைகளை நடத்துவதற்காக பி.சி.சி.ஐ 9.49 கோடி ரூபாய் செலவழித்தது. எனவே, இலங்கையில் தொடரை நடத்தினால், இந்திய ரூபாயுடன் ஒப்பிடும்போது இலங்கை நாணய மதிப்பு குறைவு என்பதால், இலங்கையில் ஐ.பி.எல் 2021 ஐ நடத்துவது மிகவும் சிக்கனமான முடிவாகவும் அமையும்.
செப்டம்பர் மாதத்தில், இங்கிலாந்தின் வெப்பநிலை அதிகபட்சமாக 18.8 டிகிரி செல்சியஸாக இருக்கும். அதேசமயம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இலங்கையின் வெப்பநிலை இந்தியாவைப் போன்றே இருக்கும் என்பதால், இந்திய வீரர்களுக்கு அது சாதகமான அம்சமாக இருக்கும்.

மற்ற செய்திகள்
