‘டெஸ்ட்டில் தொடர்ந்து 21 மெய்டின் ஓவர்’.. உலக சாதனை படைத்த இந்திய ஆல்ரவுண்டர் உயிரிழப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பபு நட்கர்னி காலமானார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரை சேர்ந்தவர் பபு நட்கர்னி (86). இவர் 1955-ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். சிறந்த ஆல்ரவுண்டரான இவர் 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1414 ரன்களும், 88 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். மேலும் 191 முதல்தர போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
கடந்த 1964-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் வீசிய 32 ஓவர்களில் 27 ஓவர்களை மெய்டினாக வீசினார். அதிலும் 21 ஓவர்கள் தொடர்ந்து மெய்டினாக வீசி உலக சாதனை படைத்தவர். இந்த சாதனையை இன்று வரை யாரும் முறியடிக்கவில்லை. 32 ஓவர்களில் வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதுமை சார்ந்த உடல்நலக்குறைவால் நேற்று அவர் இயற்கை எய்தினார். பபு நட்கர்னியின் மறைவிற்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர், சச்சின், விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.