தனது கல்யாணத்தையே தவற விட்ட கால்பந்து வீரர்.. "ஆனாலும் MARRIAGE நடந்துச்சு.." கடைசி நிமிடத்தில் செய்த ப்ளான்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் ஒருவர், தனது திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் இருந்ததால், அவர் எடுத்த முடிவு தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
ஆப்ரிக்க நாடான சியாரா லியோனை சேர்ந்தவர் மொஹமத் புயா துராய். இவர் சர்வதேச போட்டிகளில் தனது நாட்டிற்காக பங்குபெற்றுள்ள நிலையில், சீனாவில் உள்ள பிரபல கால்பந்து கிளப் ஒன்றிற்காகவும் ஆடி வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் அவர் ஸ்வீடன் நாட்டிலுள்ள மால்மோ என்ற கால்பந்து கிளப் ஒன்றிலும் துராய் மாறி உள்ளார்.
அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த ஜூலை மாத இறுதியில், புயா துராய்க்கு திருமணமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அந்த வேளையில், தனது புதிய அணிக்கான முகாமில் இணைய வேண்டும் என்ற கட்டாயமும் இருந்தது. தன்னுடைய திருமண தேதியின் போது, அணியுடன் இணைய வேண்டும் என்ற கால்பந்து கிளப் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சொந்த திருமணத்திலேயே பங்கு கொள்ள முடியாத நிலை உருவானதால், திருமணத்தை தள்ளி வைக்காமல் வேறொரு திட்டம் போட்டார் வீரர் புயா துராய். தன்னுடைய திருமணத்தில் பங்கேற்காமல், தனது கால்பந்து வாழ்க்கையின் திருப்புமுனையாக இருக்கப் போகும் கால்பந்து அணியில் இணைய வேண்டும் என்பதை அவர் தீர்மானித்து விட்டார்.
இதனால், திருமணத்திற்கு முன்பாக தனது வருங்கால மனைவியுடன் திருமண கோலத்தில் புகைப்படங்களை எடுத்துக் கொண்ட புயா துராய், திருமண தினத்தன்று பங்கு பெறாமல் போகும் என்பதால், அன்றைய தினத்தில் தன்னுடைய இடத்தில், தனக்கு பதிலாக தனது சகோதரரையும் பங்கு பெற முடிவு எடுத்துள்ளார் புயா துராய். இதற்கு அவரது வருங்கால மனைவியும் சம்மதம் தெரிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, திருமண வைபவத்தின் புகைப்படங்களை வருங்கால மனைவியுடன் எடுத்துக் கொண்டதால், தான் திருமணத்தில் இருந்தது போன்ற உணர்வை கொடுத்ததாக கால்பந்தாட்ட வீரர் புயா துராய் கூறி உள்ளார்.
திருமணத்திற்கு பின்னர், இதுவரை தனது மனைவியையே சந்திக்காத புயா துராய், தனது மனைவியை ஸ்வீடனுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அப்படி ஸ்வீடனுக்கு மனைவி வந்தால், அவருடன் ஒன்றாக இருக்க முடியும் என்றும், முதலில் கால்பந்தாட்ட லீக் தொடரை வென்ற பிறகு, ஹனிமூன் செல்ல திட்டம் போட்டுள்ளோம் என்றும் புயா துராய் தெரிவித்துள்ளார்.
கால்பந்து தொடருக்காக, தன்னுடைய திருமண நாளையே தவற விட்ட கால்பந்தாட்ட வீரர் தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.