‘இனி அப்படி பண்ணா ஆப்பு தான்’!.. அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பவுலர்களுக்கு ‘கடிவாளம்’ போடும் ஐசிசி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇரண்டாம் கட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து வெற்றி பெற்றது. ஐசிசி முதல்முறையாக நடத்திய இந்த தொடரில் நியூஸிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
இந்த நிலையில், இரண்டாம் கட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு (2021 முதல் 2023 வரை) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த டெஸ்ட் தொடரில், ஒவ்வொரு அணியும் உள்நாட்டில் மூன்று முறையும், வெளிநாடுகளில் மூன்று முறையும் விளையாட உள்ளன. இதில் அதிக வெற்றிகளைப் பெற்று, அதிகமான புள்ளிகளைப் பெறும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நுழையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ESPNcricinfo ஊடகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள இங்கிலாந்து தொடரே, இந்திய அணியின் முதல் WTC Phase 2 சீரிஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி சந்திக்க உள்ள ஒரே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இது மட்டும்தான். இதனை அடுத்து வரும் 2022-ம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
அதேபோல், ஒவ்வொரு டெஸ்ட்டுக்கும் ஒரே எண்ணிக்கையிலான புள்ளிகளை ஒதுக்க ஐசிசி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்று பெற்ற அணிக்கு 12 புள்ளிகளும், டிரா செய்தால் இரண்டு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகளும் வழங்கப்படும். அதுவே போட்டி சமனில் முடிந்தால், இரண்டு அணிகளுக்கும் தலா 6 புள்ளிகள் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மெதுவாக பந்து வீசும் அணிகளுக்கு இனி அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அணி மெதுவாக பவுலிங் வீசும் பட்சத்தில், வீசப்படும் ஒவ்வொரு ஓவருக்கும், அவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையிலிருந்து ஒரு புள்ளி குறைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.