"இந்த தடவ நமக்கு நல்ல 'சான்ஸ்' இருக்கு.. இந்தியாவோட பலமே இது தான்.." பக்காவாக கணித்த 'டிராவிட்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர், பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கேற்கவுள்ளது.
நியூசிலாந்து அணியை, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் வைத்து, ஜூன் மாதம் 18 ஆம் தேதி இந்திய அணி எதிர்கொள்ளவுள்ள நிலையில், இதற்கான இந்திய அணியை சில தினங்களுக்கு முன் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரையும் ஆகஸ்ட் மாதம் ஆடவுள்ளது.
கடைசியாக, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அசத்தலாக கைப்பற்று பலம் வாய்ந்த அணியாக திகழும் இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரையும் கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி அசத்தும் என்றும் கருதுகின்றனர்.
இந்நிலையில், இதுபற்றி பேசியுள்ள முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் (Rahul Drvaid), 'இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு தாக்குதல் மிகவும் அற்புதமாக உள்ளது. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதே போல, இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையில், உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் ஜோ ரூட் உள்ளார். அந்த அணியின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸும் சிறந்த பார்மில் உள்ளார். எனினும் அவரைக் கட்டுப்படுத்த இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் உள்ளார்.
ஆனால், இந்திய அணிக்கு இந்த முறை சிறந்த வாய்ப்பு இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். ஆஸ்திரேலிய தொடரை இந்திய அணி வென்றதில் இருந்தே, அவர்கள் மிகவும் தன்னம்பிக்கையுடன் உள்ளனர். இதில், சில வீரர்களுக்கு இங்கிலாந்தில் ஆடிய அனுபவம் உள்ளது. பேட்டிங்கிலும் அதிக அனுபவம் வாய்ந்தவர்கள் உள்ளனர். எனவே, இந்திய அணிக்கு இது சிறந்த வாய்ப்பாக இருக்கலாம். எனது கணிப்புப்படி, 3 - 2 என்ற கணக்கில், இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றலாம்.
இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் சேர்க்கப்பட வேண்டும். இவர்கள் சிறப்பாக, பேட்டிங்கும் செய்யக் கூடியவர்கள். இதனால், இந்திய அணியில் சிறந்த ஆல் ரவுண்டர் இடம், சமநிலையை அளிக்கலாம். இங்கிலாந்தில் ஆகஸ்ட் மாதம் கோடைக்காலம் என்பதால், பிட்ச் வறண்டு, பந்து நன்கு சுழலவும் செய்யலாம்' என டிராவிட் தெரிவித்துள்ளார்.