'தமிழக' வீரருக்கு மீண்டும் கிடைக்கப் போகும் 'அதிர்ஷ்டம்'?!.. "நான் எப்போவுமே 'ரெடி' தான்.." 'உற்சாகத்துடன்' பதில் சொன்ன 'தினேஷ் கார்த்திக்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் நடைபெற்று வந்த 14 ஆவது ஐபிஎல் சீசன், சில அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக, பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள போட்டிகளை செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்தவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கான அட்டவணைகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், அக்டோபர் மாதத்திற்கு பிறகு, டி 20 உலக கோப்பையும் நடைபெறவுள்ளது.
உலக கோப்பை போட்டியைக் கருத்தில் கொண்டு, சில சர்வதேச அணிகளைச் சேர்ந்த வீரர்கள், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தெரிகிறது. அதிலும் குறிப்பாக, ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சமயத்தில், இங்கிலாந்து அணி, சர்வதேச தொடர்கள் சிலவற்றில் ஆடவுள்ளது. இதனால், இங்கிலாந்து அணி வீரர்கள், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக, இங்கிலாந்து வீரர்கள் அதிகமுள்ள ஐபிஎல் அணிகள் நிச்சயம் தடுமாற்றத்தை சந்திக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணியின் கேப்டனாக இருக்கும் இங்கிலாந்து வீரர் இயான் மோர்கனும் வருவது சந்தேகமாக இருப்பதால், அந்த அணியை யார் வழி நடத்துவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஐபிஎல் சீசனில், கொல்கத்தா அணியை இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik) வழி நடத்தியிருந்தார். ஆனால், அந்த சீசனின் பாதியிலேயே தினேஷ் கார்த்திக் கேப்டன்சி சரியில்லை என மோர்கனை புதிய கேப்டனாக கொல்கத்தா அணி நியமித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த சீசனில் மீதமுள்ள போட்டிகளுக்காக மோர்கன் வருவாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில், மீண்டும் கேப்டனாக வாய்ப்பு கிடைத்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், 'ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் வர மாட்டார் என என்னிடம் சொல்லி விட்டார். ஆனால், மோர்கனை வைத்துப் பார்த்தால், அதனை முடிவு செய்வதற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறது.
அவர் பங்கேற்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால், அணியை தலைமை தாங்கும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தால், நிச்சயம் அதனை ஏற்றுக் கொள்வேன்' என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.