'எல்லாரும் சொந்த ஊருக்கு கிளம்பிட்டாங்க...' ஆனா 'இவரு' மட்டும் இங்கையே மாட்டிகிட்டாரே...! - கொல்கத்தா அணிக்கு மேலும் ஒரு தலைவலி...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து வீரர் டிம் சீஃபர்டுக்கு கொரோனா உறுதியானதால் நாடு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதையடுத்து ஐபிஎல் போட்டிகள் தடை செய்யப்பட்டன. இந்நிலையில் வீரர்கள் சொந்த நாடு திரும்பும் நிலையில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய நியூசிலாந்து வீரர் டிம் சீஃபர்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாக டிம் சீஃபர்ட் மற்ற வீரர்களுடன் தனது நாட்டுக்கு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சென்னை கொண்டு வரப்பட்டுள்ள டிம், ஏற்கனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி அனுமதிக்கப்பட்டுள்ள அதே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், 'கொரோனா பரிசோதனையில் 'நெகட்டிவ்' முடிவு வந்தபின்னரே, டிம் சீஃபர்ட் நாடு திரும்புவதற்கான ஏற்பாடு செய்யப்படும். மேலும் அவருக்குத் தேவையான சிகிச்சை ஏற்பாடு உள்ளிட்ட அனைத்தையும் தாங்களே கவனித்துக் கொள்கிறோம்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.