‘எப்போ சிஎஸ்கே-ல சேர்ந்தாரோ அப்பவே அவர் லைஃப் மாறிடுச்சு’.. இதுக்கெல்லாம் காரணம் தோனிதான்.. இளம் வீரரை தாறுமாறாக புகழ்ந்த சேவாக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரரை வீரேந்தர் சேவாக் புகழ்ந்து பேசியுள்ளார்.
ஐபிஎல் (IPL) தொடரின் இறுதிப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 14-வது ஐபிஎல் தொடரின் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை சிஎஸ்கே அணி தட்டிச்சென்றது.
இந்த ஐபிஎல் தொடரின் சென்னை அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், டு பிளசிஸ், ஜடேஜா, தீபக் சஹார் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற ஷர்துல் தாகூர் முக்கிய காரணமாக இருந்தார்.
அப்போட்டியில் முதல் 10 ஓவர்கள் வரை கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி ரன்களை குவித்து வந்தது. அதனால் கொல்கத்தா அணிதான் வெற்றி பெரும் என பலரும் கணித்தனர். அப்போது ஷர்துல் தாகூர் வீசிய 11-வது ஓவரில் கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா ஆகிய இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதுதான் ஆட்டத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் (Virender Sehwag), ஷர்துல் தாகூர் (Shardul Thakur) மற்றும் சிஎஸ்கே கேப்டன் தோனியை (Dhoni) புகழ்ந்து பேசியுள்ளார். அதில், ‘சிஎஸ்கே அணியில் தோனியின் தலைமையின் கீழ் விளையாடியதன் மூலம் ஷர்துல் தாகூர் சிறந்த வீரராக மாறியுள்ளார். அவரது கிரிக்கெட் எதிர்காலம் தோனியால் செழுமை அடைந்துள்ளது. ஏனென்றால் சிஎஸ்கே அணியில் அவர் இணையும் முன், இந்திய அணியில் உள்ளே செல்வதும், வெளியே வருவதுமாய் இருந்தார்.
ஆனால் சிஎஸ்கே அணியில் அறிமுகமாகிய பின்னர் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பிரகாசமாக மாறியுள்ளது. கடந்த 4 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 55 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். அதேபோல் நடப்பு ஐபிஎல் தொடரிலும், சிஎஸ்கே அணிக்காக அதிக விக்கெட் எடுத்த வீரராக திகழ்ந்துள்ளார். எப்போது சிஎஸ்கே அணியில் சேர்ந்தாரோ அப்போதே ஷர்துல் தாகூரின் எதிர்காலம் மாறிவிட்டது’ என சேவாக் கூறியுள்ளார்.