இந்தியாவுல 'மொத ஆளு' நீங்கதான்.. 'தளபதி' கோலிக்கு 'விசில்' போட்ட சிஎஸ்கே!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 23, 2019 07:57 PM

இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.

CSK reacts to Virat Kohli becoming first Indian to score century

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 30.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல்நாள் ஆட்டமுடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு ரஹானே-கோலி நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

ரஹானே 51 ரன்களில் அவுட் ஆனார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கோலி பிங்க் பந்தில் சதம்(103 ரன்கள்) அடித்து அசத்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியின் 27-வது சதம் ஆகும். மேலும் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 5000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 97 இன்னிங்சில் 5000 ரன்கள் கடந்தார். இந்த சாதனையை விராட் கோலி 86வது இன்னிங்சில் முறியடித்துள்ளார்.

இதுதவிர வெள்ளைப்பந்து, சிகப்பு பந்து, இளஞ்சிவப்பு பந்து என 3 மூன்று விதமான பந்துகளிலும் சதமடித்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார். கோலியின் இந்த சாதனை குறித்து சென்னை அணி, ''இளஞ்சிவப்பு பந்தில் சதம் அடித்த முதல் இந்தியர் கோலி.. விசில்போடு,'' என வாழ்த்தி இருக்கிறது.

இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 எடுத்தபோது டிக்ளேர் செய்வதாக கேப்டன் கோலி அறிவித்தார். தற்போது இந்திய அணி வங்கதேச அணியைவிட 241 ரன்கள் லீடிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.