‘தூத்துக்குடிக்கு வந்த ஷேன் வாட்சன்’.. ‘தல’ தோனிய பத்தி என்ன சொன்னார் தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Oct 16, 2019 11:06 AM
தூத்துக்குடியில் பள்ளி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன், தோனி மற்றும் கங்குலி குறித்த தனது கருத்தை தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் எம்.எஸ். தோனி கிரிக்கெட் வலைப்பயிற்சி கூடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான ஷேன் வாட்சன் கலந்துகொண்டார். கிரிக்கெட் வலைப்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தப்பின் தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இந்திய அணியில் துடிப்புமிக்க வீரர்கள் உள்ளனர். தமிழகத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் பார்த்தேன். அதில் விளையாடிய ஏராளமான இளைஞர்களின் திறமையை பார்த்தேன். தமிழகம் கிரிக்கெட்டில் நன்றாக முன்னேறி வருகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரிய தலைவராக இளம் நிர்வாகி கங்குலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் திறம்பட செயல்படுவார்’ என பேசினார்.
இதனை அடுத்து தோனி குறித்து பேசிய வாட்சன், ‘இந்திய அணியில் தோனியின் ஆட்டம் ரொம்ப பிடிக்கும். அவர் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எடுக்கும் முடிவுகள் சிறப்பாக இருக்கும். அவருடைய தலைமை பண்பும், போராடும் குணமும் எனக்கு பிடிக்கும்’ என பேசினார். இறுதியாக மாணவர்கள் கேட்டுகொண்டதால் ஆங்கில பாடல் ஒன்றையும் பாடி அசத்தினார்.