‘சாதி ரீதியான கமெண்ட் பத்தி கேள்வி பட்டேன்’!.. ஹாக்கி வீராங்கனை ‘வந்தனா கட்டாரியா’ சொன்ன சிறப்பான பதில்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய மகளிர் ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா, தன் வீட்டின் முன் நடந்த சாதி ரீதியான தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் இந்திய மகளிர் ஹாக்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய மகளிர் ஹாக்கி வரலாற்றில் முதல்முறையாக ஒலிம்பிக்கில் அரையிறுத்துக்கு முன்னேறி அசத்தியது. இதனால் மகளிர் ஹாக்கி அணியின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நடைபெற்ற அர்ஜெண்டினாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. ஆனாலும் கடைசி நொடி வரை போராடியே தோல்வியை சந்தித்ததால் இந்திய மகளிர் அணிக்கு பாராட்டுகளே குவிந்தன.
ஆனால் உத்தகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா வீட்டின் முன் சிலர் பட்டாசு வெடித்தும், நடனம் ஆடியும் இழிவு செய்தனர். பட்டியலின வீராங்கனைகள் அதிகம் விளையாடியதாலேயே இந்திய அணி தோல்வி அடைந்ததாக வந்தனா கட்டாரியா குடும்பத்தினருடன் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதுதொடர்பாக வந்தனா கட்டாரியாவின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஒலிம்பிக் போட்டியில் வந்தனா கட்டாரியாவின் பங்கு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்த தொடரின் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது. அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் மட்டும் 1-0 என்ற கோல் கணக்கில் நூலிழையில் வெற்றி பெற்றது. இதனால் கால் இறுதிக்கு கூட தகுதி பெறாமல் இந்திய மகளிர் ஹாக்கி அணி வெளியேறி விடும் என பலரும் விமர்சனம் செய்தனர்.
ஆனால் அடுத்து நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் வந்தனா கட்டாரியாதான். அவர் தொடர்ந்து அடித்த 3 கோல்கள்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இதன்மூலம் ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை வந்தனா கட்டாரியாக பெற்றார்.
History has been made. 🇮🇳
Vandana Katariya scores the first-ever hat-trick for the Indian Women's Hockey Team in the Olympics. 💙#INDvRSA #IndiaKaGame #TeamIndia #Tokyo2020 #TokyoTogether #StrongerTogether #HockeyInvites #WeAreTeamIndia #Hockey pic.twitter.com/DPshZMj36I
— Hockey India (@TheHockeyIndia) July 31, 2021
இந்த ஒலிம்பிக் போட்டிக்காக வந்தனா கட்டாரியா மிகப்பெரிய தியாகத்தை செய்துள்ளார். இவர் ஹாக்கி விளையாடுவதற்கு உறவினர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அவரது தந்தை மட்டுமே பக்கபலமாக இருந்துள்ளார்.
இந்த சூழலில் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக வந்தனா கட்டாரியா பயோ பபுளில் இருந்தார். அப்போது அவரது தந்தை எதிர்பாராத விதமாக உயிரிழந்துவிட்டார். ஆனால் பயோ பபுளை விட்டு வெளியேறினால், ஒட்டுமொத்த அணியின் பயணமும், பயிற்சி திட்டமும் பாதிக்கப்படும் என்பதற்காக தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதை வந்தனா கட்டாரியா தவிர்த்தார். தனக்கு உறுதுணையாக இருந்த தந்தையை இழந்த வலியை சுமந்துகொண்டே அவர் ஒலிம்பிக்கில் விளையாட சென்றார்.
இப்படி இருக்கையில் சாதி ரீதியாக அவரது குடும்பத்தினரை சிலர் அவமானம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பேசிய வந்தனா கட்டாரியா, ‘நாங்கள் நாட்டுக்காக விளையாடுகிறோம். சாதி ரீதியான கமெண்ட் பற்றி கேள்வி பட்டேன். அப்படி நடந்திருக்க கூடாது. இதை யாரும் செய்யாதீர்கள்’ என அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அங்கூர் பால், விஜய் பால் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சுமித் சவுகான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இதில் விஜய் பால் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஹாக்கி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.