'6 நொடிகளில்'... ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியாவை தலை நிமிர வைத்த 'தூண்'!.. ஒட்டு மொத்த தேசமும் உச்சரிக்கும் பெயர்!.. யார் இந்த ஸ்ரீஜேஷ்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - ஜெர்மனி இடையில் இன்று நடந்த வெண்கல பதக்கத்திற்கான ஆண்கள் மேட்ச் ரசிகர்கள் எல்லோரையும் சீட் நுனியில் அமர வைத்துவிட்டது. அதிலும் அந்த கடைசி 6 நொடிகள் இந்திய ரசிகர்களை திரில் படம் பார்க்கும் நிலைமைக்கு கொண்டு சென்றுவிட்டது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலம் வென்றுள்ளது. இந்தியா 41 வருடங்களுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியின் ஹாக்கி பிரிவில் இப்படி ஒரு பதக்கத்தை வெல்கிறது. இன்றைய மேட்ச்சில், முதல் நிமிடத்திலேயே ஜெர்மனிதான் இந்தியாவிற்கு எதிராக கோல் போட்டது.
அதுமட்டுமின்றி ஒரு கட்டத்தில் ஜெர்மனி 3, இந்தியா 1 என்ற நிலை இருந்தது. அப்போதே ஜெர்மனிதான் வெற்றிபெறும் என்று பலரும் கணித்து இருந்தனர். ஆனால், சரிவில் இருந்து மீண்ட இந்தியா கடைசியில் 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி, வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. இந்த போட்டியில் இந்தியாவின் டிபன்ஸ், முதல் இரண்டு கால் ஆட்டங்களில் அவ்வளவு சிறப்பாக இல்லை. முக்கியமாக ஜெர்மனிக்கு இந்தியா எளிதாக கோல் அடிக்கும் வாய்ப்புகளை அடுத்தடுத்து ஏற்படுத்தி கொடுத்தது. தொடர்ச்சியாக முதல் பாதியில் ஜெர்மனி அடுத்தடுத்து மூன்று கோல் போட இந்தியாவின் மோசமான டிபன்ஸ் முக்கியமான காரணமாக இருந்தது.
இந்த போட்டியில் ஜெர்மனி அணிக்கு கிட்டத்தட்ட 10 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தது. குறிப்பாக, கடைசி 5 நிமிடத்தில் 3 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை ஜெர்மனி பெற்றது. முந்தைய அரையிறுதிப் போட்டியின் கடைசியில் இதேபோல் பெல்ஜியத்திற்கு நிறைய பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தது. இதனால்தான் அந்த போட்டியில் இந்தியாவை பெல்ஜியம் வீழ்த்தியது.
இன்றும் ஜெர்மனிக்கு இதேபோல் பெனால்டி கார்னர் வாய்ப்புகள் வரிசையாக கிடைத்தது. ஆனால், இன்று இந்திய அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆட்டம் மிக அபாரமாக இருந்தது. இந்திய ஹாக்கி அணியின் தூண் என்று அழைக்கப்படும் இவர் கடைசிவரை சிறப்பாக ஆடி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். 6 பெனால்டி கார்னர் ஷாட்கள், இரண்டு நேரடி கோல்களை தடுத்து இந்தியாவின் வெற்றிக்கு ஸ்ரீஜேஷ் காரணமாக இருந்தார்.
லீக் ஆட்டங்களில் இருந்தே இந்தியாவை தோல்வியில் இருந்து காப்பாற்றி வரும் பணியை ஸ்ரீஜேஷ் மிகச் சிறப்பாக செய்து வருகிறார். முக்கியமாக அர்ஜென்டினாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்தியாவின் தடுப்பாட்ட வீரர்கள் மிகவும் மோசமாக சொதப்பினார்கள். இதில் இந்தியா வெற்றிபெற முக்கிய காரணம் ஸ்ரீஜேஷ். இவர் கோல்களை தடுத்த ஒரே காரணத்தால்தான் இந்தியா வெற்றிபெற்றது.
இந்த தொடர் முழுக்கவே ஸ்ரீஜேஷ் பல பெனால்டி ஷாட்களை தடுத்து இருக்கிறார். இவர் முன்னாள் கேப்டன் என்பதால் கோல் போஸ்டில் இருந்து வீரர்களை மிகச் சிறப்பாக வழி நடத்தினார். லீக் போட்டிகளில் முக்கியமான கட்டங்களில் பிரிட்டன் 3 கோல் முயற்சியை தடுத்ததும் ஸ்ரீஜேஷ்தான். சுவர் போல வலிமையாக நின்று கடைசி நொடி வரை பிரிட்டனின் கோல் முயற்சிகளை தடுத்து இந்தியாவை வெற்றிபெற வைத்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மட்டுமே இவரின் ஆட்டம் கொஞ்சம் சறுக்கியது.
இன்றும் கூட கடைசி 6 நொடி இருக்கும் போது டிபன்ஸ் வீரர்கள் செய்த தவறால் ஜெர்மனிக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. அப்போது ஜெர்மனி ஒரு கோல் அடித்தால் ஆட்டம் டிரா ஆகிவிடும். இப்படிப்பட்ட நிலையில்தான், தூண் போல உறுதியாக நின்று கோலை தடுத்தார் ஸ்ரீஜேஷ்.
இத்தகைய பரபரப்பான போட்டியில், கடைசி நொடியில் கோலை தடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு இன்று ஸ்ரீஜேஷ் காரணமாக இருந்துள்ளார். ஸ்ரீஜேஷ் கேரளாவை சேர்ந்தவர். ஆனால், கூட அதிகாரப்பூர்வமாக இவர் தமிழ்நாட்டு வீரர் ஆவார். இவர் தமிழ்நாடு ஹாக்கி கழகத்தின் பதிவு செய்யப்பட்ட வீரர். ஹாக்கியில் தமிழ்நாடு அணிக்காக தேசிய போட்டிகளில் ஸ்ரீஜேஷ் விளையாடி இருக்கிறார். தமிழ்நாடு அணி மூலமாகவே இந்திய அணிக்கு இவர் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.