கிரிக்கெட் வரலாற்றில் இவ்வளவு ரன் யாரும் அடிச்சதில்லை.. 49 பவுண்டரிகள்.. ஒருநாள் போட்டியில் சாதனை படைத்த பார்வையற்ற ஆஸி. வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவை சேர்ந்த பார்வை மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரர் ஒருவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் உலக சாதனை புரிந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஸ்டீபன் நீரோ. பார்வை மாற்றுத் திறனாளியான இவர் கிரிக்கெட் மீதான ஆர்வம் காரணமாக ஆஸ்திரேலியாவின் பார்வை மாற்றுத் திறனாளி கிரிக்கெட் அணியில் இணைந்திருக்கிறார். இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 309 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார் நீரோ. இந்த போட்டியில் 120 பந்துகளை சந்தித்து 49 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்களை விளாசியுள்ளார் இவர். இதன்மூலம் உலகம் முழுவதும் பல கிரிக்கெட் ஜாம்பவான்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் நீரோ.
முதல் ஒருநாள் போட்டி
பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் பேட்டிங் செய்த ஆஸி. அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 542 ரன்களை குவித்தது. இதில் நீரோ மட்டும் 309 ரன்கள் எடுத்து அசத்தியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து 543 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களத்திற்கு வந்த நியூசிலாந்து அணியால் 272 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 270 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது.
முந்தைய சாதனை
இதற்கு முன்பாக 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற பார்வையற்றோர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த மசூத் ஜான் என்னும் வீரர் 262 ரன்கள் எடுத்ததே இதுவரையில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட அதிக ரன்னாக இருந்தது. இந்நிலையில் இந்த சாதனையை முறியடித்திருக்கிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நீரோ.
இதுகுறித்துப் பேசிய நீரோ," நான் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது இதுவே முதல்முறையாகும். சில நேரங்களில் நான் மனச்சோர்வுடன் இருந்தேன். அவுட்டாகி விடுவேனோ என நினைத்தேன். சக வீரர்கள் என்னை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வந்தனர். இந்த சாதனையில் அவர்களுக்கும் பங்குண்டு. நான் தனியாளாக இதனை செய்திருக்க முடியாது" என்றார்.
congenital nystagmus என்னும் நோயால் பாதிக்கப்பட்ட நீரோ தனது பார்வையை இழந்தாலும் சாதனை புரிய குறைகள் ஒரு தடையில்லை என்பதை உலக அரங்கில் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார்.