"நான் அவரு இல்ல".. தவறான நபரை TAG செய்து வாழ்த்து கூறிய சவுரவ் கங்குலி.. அதுக்கு அவர் கொடுத்த ரிப்ளை தான் இப்போ வைரல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக தகுதி பெற்றுள்ளதை அடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்திருந்தார். இதில், இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு பதிலாக வேறு ஒருவரை அவர் டேக் செய்ய, அவரும் அதற்கு ரிப்ளை செய்திருக்கிறார்.

ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2023-ம் ஆண்டு ஜூன் 16 முதல் ஜூலை 16 வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்களின் 3-வது பகுதி நடைபெற்று வருகிறது. இதில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. இவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பிடித்துள்ளன. தகுதி சுற்று தொடரில் ‘டி‘ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா தனது முதல் இரு ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான், கம்போடியாவை தோற்கடித்து 6 புள்ளிகள் பெற்றிருந்தது. இந்நிலையில், ‘பி’ பிரிவில் இடம் பெற்றிருந்த பாலஸ்தீனம் தனது கடைசி ஆட்டத்தில் நேற்று பிலிப்பைன்ஸை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் 2-வது இடம் வகித்த இந்திய அணியும் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. இதனால் கால்பந்து ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
வாழ்த்து
இந்நிலையில், இந்திய கால்பந்து அணி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி ட்விட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த வாழ்த்து செய்தியில்,"2023 ஆம் ஆண்டு AFC ஆசியக் கோப்பைக்கு தகுதி பெறுவதில் இந்திய கால்பந்து அணி தீவிரமாக விளையாடி அதில் வெற்றியும் பெற்றுள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தலைமையில் அணி வீரர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக விளையாடினர். ரசிகர்களின் ஆதரவு ஆரம்பம் முதலே சிறப்பாக இருந்தது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
நான் அவர் இல்லை
கங்குலி வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், அவர் தவறான சுனில் சேத்ரியை டேக் செய்திருந்திருக்கிறார். இதற்கு பதிலளித்த அந்த நபர்,"ஹாய் சவுரவ், நான் சுனில். நேபாளத்தை சேர்ந்தவர். நான் உங்களது கேப்டன் சுனில் சேத்ரி அல்ல. தயவுசெய்து உங்களது கேப்டனை குறிப்பிட்டு வாழ்த்துக்களை கூறவும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி போட்ட ட்வீட் மற்றும் அதற்கு வந்த ரிப்ளை வைரலாக பரவிவருகிறது.

மற்ற செய்திகள்
