"மேட்ச் TIGHT ஆகும்போது அவர் பயந்துடறாரு".. ரிஷப் பண்டை விமர்சித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரிஷப் பண்ட் தலைமையின் கீழ் இந்திய அணி இரண்டு T20 போட்டிகளில் தோல்வியை பெற்றிருக்கும் நிலையில், அவரது கேப்டன்சி குறித்து விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. முன்னதாக கேஎல் ராகுல் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக அவர் வெளியேற ரிஷப் பண்ட்-ற்கு கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா உடனான முதல் இரண்டு T20 போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்திருப்பது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் ரிஷப் பண்ட் கேப்டன்சி குறித்து விமர்சித்துள்ளார். இதுபற்றி பேசிய அவர்,"5 போட்டிகள் இந்த தொடரில் ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. இனிவரும் போட்டிகளில் தவறுகள் ஏற்படாத வண்ணம் விளையாட வேண்டும். டாசை பொருட்படுத்தாமல் அதிக இலக்கை நிர்ணயிக்க வேண்டும்" என்றார்.
பயம்
ரிஷப் பண்ட் மேட்ச் பரபரப்பான சூழ்நிலையை அடையும் வேளையில் நடந்துகொள்ளும் விதம் பற்றி பேசிய அவர்," ஐபிஎல் தொடரிலேயே அதை கவனித்திருக்கிறோம். மேட்ச் இறுக்கமான சூழ்நிலையை எட்டுகையில் அவர் பயப்படுகிறார் எனத் தோன்றுகிறது. ஆனால், எவ்வளவு தூரம் அவர் கேப்டன்சி பதவியில் நீடிக்கிறாரோ, அவ்வளவு தூரம் அவர் மேன்மை பெறுவார்" என்றார்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அக்சர் படேல் ,மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் கடைசி போட்டியில் அதிக ரன்களை வழங்கியதை குறிப்பிட்டுப் பேசிய அவர்," ஆரம்பத்தில் இந்திய பவுலர்கள் நன்றாகவே பந்து வீசினர். குறிப்பாக புவனேஷ்வர் குமார் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. ஆனால், 11 வது ஓவருக்கு பிறகு அதிக ரன்களை நமது பவுலர்கள் வழங்கினர். இந்த விஷயத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் செயல்படுவதை போல நமது பவுலர்களும் பந்துவீச வேண்டும். எஞ்சியுள்ள 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற வேண்டும்" என்றார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தொடர்ந்து இரு தோல்விகளை சந்தித்திருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர், ரிஷப் பண்டை விமர்சித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | அப்படி போடு… முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு பென்ஷன் உயர்வு… BCCI அறிவித்த சூப்பர் தகவல்