‘ஏன் நமக்கு மட்டும் இப்டியே நடக்குது’!.. அடுத்தடுத்து 2 முக்கிய வீரர்கள் காயம்.. சிக்கலில் இந்திய அணி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் மற்றும் ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி 105.4 ஓவர்களில் அந்த அணி 338 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து விளையாடியது.
அப்போது ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் வீசிய ஓவரில் வந்த பந்தை ரிஷப் பந்த் அடித்து ஆட முயன்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக பந்து அவரது இடது முழங்கையில் பட்டது. இதனால் வலியால் துடித்த ரிஷப் பந்துக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
காயத்துக்கு முன்னர் 4 பவுண்டரிகள் விளாசி அவர், காயம் ஏற்பட்ட பின்னர் அவரது ரன் விகிதம் குறைய தொடங்கியது. இதனால் 67 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஹேசில்வுட் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார்.
இதேபோல் இன்றைய ஆட்டத்தில் ஜடேஜாவுக்கும் இடது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் காயம் அடைந்த பின்னர் அவரது ரன் விகிதமும் குறைய தொடங்கியது. இதனால் 37 பந்துகளில் 28 ரன்களுக்கு ஜடேஜா அவுட்டாகினார்.
இதனைத் தொடர்ந்து காயமடைந்த இரு வீரர்களுக்கும் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரிஷப் பந்துக்கு பதிலாக சஹா விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். அதேபோல் ஜடேஜாவுக்கு பதிலாக மயங்க் அகர்வால் பீல்டிங் செய்து வருகிறார். முன்னதாக உமேஷ் யாதவ், இப்போது ரிஷப் பந்த், ஜடேஜா என வீரர்கள் அடுத்தடுத்து காயமடைவது இந்திய அணி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.