ANDREW FLINTOFF: விபத்தில் சிக்கிய கார்.. ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரு ஃபிளிண்டாஃப்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஆண்ட்ரு ஃபிளிண்டாஃப் கார் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழந்துள்ளனர்.

இங்கிலாந்தின் தெற்கு லண்டனில் உள்ள Dunsfold Park Aerodrome ன் டெஸ்ட் டிராக்கில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. தனியார் ஊடகத்திற்காக அவர் சூட்டிங்கில் இருந்தபோது இந்த மோசமான சம்பவம் நடைபெற்றிருக்கிறது. விபத்து நடைபெற்ற உடனேயே அங்கிருந்த மருத்துவ நிபுணர்கள் அவரை பரிசோதனை செய்ததாகவும் பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், விபத்தில் ஃபிளிண்டாஃப்-ற்கு மோசமான காயங்கள் ஏற்படவில்லை என அந்த ஊடகம் தனது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளது. தற்போது 45 வயதான ஃபிளிண்டாஃப் இங்கிலாந்து அணிக்காக 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதுவரையில் 117 ஒருநாள் போட்டிகளிலும் 7 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற இவர், தனியார் ஊடகம் தயாரித்துவரும் கார் பந்தைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார். விபத்து பற்றி அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில்,"இன்று காலை டாப் கியர் சோதனைப் பாதையில் நடந்த விபத்தில் ஆண்ட்ரு ஃபிளிண்டாஃப் காயமடைந்தார். உடனடியாக மருத்துவர்கள் குழு சம்பவ இடத்திற்குச் சென்றனர். அவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார், மேலும் விவரங்களை உரிய நேரத்தில் உறுதி செய்வோம். ஃபிளின்டாஃப்பின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல. படப்பிடிப்பிலும் வழக்கமான அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் இருந்தன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டும் ஆண்ட்ரு ஃபிளிண்டாஃப் இதே நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் சிக்கினார். மணிக்கு 125 மைல் வேகத்தில் பயணித்த அவரது கார் விபத்தை சந்தித்த நிலையில், அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். இந்நிலையில், தற்போது மீண்டும் அவர் விபத்தில் சிக்கியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
