3 வது முறை கர்ப்பம்.. பிரசவத்துக்கு அழைத்து சென்ற குடும்பம்.. செக்கப்க்கு முன் இளம்பெண் போட்டுடைத்த உறையவைக்கும் உண்மை.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ காலம் நெருங்கிய போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர் அவரைப் பற்றி தெரிய வந்த தகவல் குடும்பத்தினர் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியை அடுத்துள்ள குமாராட்சி என்னும் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. இதற்கு மத்தியில் அந்த இளம் பெண் இரண்டு முறை கர்ப்பமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஆனால் இந்த இரண்டு முறையும் கர்ப்பம் கலைந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றது. இந்த சம்பவம் அந்த இளம்பெண் மட்டுமில்லாமல் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் கடும் துயரத்தில் ஆழ்த்தி இருந்தது.
இதனிடையே, மூன்றாவது முறையாக அந்த பெண் கருவுற்றிருந்த நிலையில், வேலைக்காக அவரது கணவர் வெளிநாட்டுக்கும் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் மற்றொரு அதிர்ச்சியான சம்பவமும் அரங்கேறி உள்ளது. மூன்றாவது முறையும் கர்ப்பமான அந்த பெண்ணுக்கு கரு கலைந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், என்ன செய்வது என்று தெரியாமலும் அந்த பெண் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.
கணவர் மற்றும் அவரது பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிந்தால் தன்னை குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்றும் பயத்தில் இருந்த அந்த பெண், வயிற்றில் துணியை கட்டிக்கொண்டு கர்ப்பிணியாக ஒன்பது மாதங்கள் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து வருவதாகவும் வீட்டில் கூறிவிட்டு அந்த பெண் சென்று வந்துள்ளார்.
தற்போது குழந்தை பிறப்பதற்கான நேரம் வந்ததாக கூறி தனது மாமியார் மற்றும் குடும்பத்தினர் சிதம்பரத்திலுள்ள மருத்துவமனைக்கு அந்த இளம் பெண்ணை அழைத்து வந்துள்ளனர். மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ய முயன்றுள்ளனர். அப்போது தான் கருத்தரிக்கவில்லை என்றும் வயிற்றில் துணியை வைத்து 9 மாதமாக கர்ப்பிணி போல் வீட்டில் நடந்து வந்தேன் என்றும் மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.
மூன்று முறையும் கருத்தரித்த பிறகு கரு கலைந்து போனதால் குடும்பத்தில் மாமியார், உறவினர்கள் உள்ளிட்டோர் தன்னை ஒதுக்கி வைப்பார்கள் என்ற பயத்தில் அப்படி செய்ததாகவும் கூறி உள்ளார். கர்ப்பிணியாக இளம்பெண் நடித்து வந்த தகவலறிந்த மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து வெளியே வந்த பெண், கழிவறைக்கு சென்ற போது குழந்தை கீழே விழுந்து இறந்ததாகவும் உறவினர்களுடன் பொய் கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் கடும் பரபரப்பு உருவான நிலையில், பின்னர் பெண் கூறியது பொய் என்பதும் டாக்டர்கள் வழியாக குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது.
இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்று சிறந்த ஆலோசனைகளை வழங்கினர். அதே போல, பெண்ணின் குடும்பத்தினரிடமும் உரிய அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தனர்.

மற்ற செய்திகள்
