IPL 2022: மனம் திறந்து கேட்ட கோலி… மீண்டும் ஆர் சி பி அணியில் இணையும் MR 360!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆர் சி பி அணிக்காக விளையாடி வந்த தென் ஆப்பிரிக்க வீரரான டிவில்லியர்ஸ் கடந்த ஆண்டு தொடரோடு ஐபிஎல்-ல் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார்.
நடப்பு ஐபிஎல் தொடர் மார்ச் 26-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ளது. இதற்க்கான கால அட்டவணை சமீபத்தில் வெளியானது. இதற்காக எல்லா அணிகளும் தயாராகி வருகின்றன. பல மாற்றங்களோடு இந்த தொடரில் விளையாட உள்ள ஆர் சி பி அணி இன்னும் தங்கள் கேப்டன் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.
கோலியின் ராஜினாமா
2014 ஆம் ஆண்டு ராயல் சேலஞர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பைப் பெற்ற கோலி 7 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை விராட் கோலி வழிநடத்தினார். இருப்பினும் அந்த அணி ஐபிஎல் கோப்பையை இதுவரையில் வாங்காததால் அதற்கு பொறுப்பேற்று அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் கோலி. பல முறை ப்ளே ஆஃப்க்கு சென்ற போதும், சில முறை பைனலுக்கே சென்ற போதும் இன்னும் கோப்பையை வெல்ல முடியவில்லை.இந்நிலையில் கடந்த ஆண்டு ஆர் சி பி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். ஆனால் கடைசி வரை ஆர் சி பி அணிக்காகதான் விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதையடுத்து ஆர் சி பி அவரை 15 கோடிக்கு தக்கவைத்தது.
டிவில்லியர்ஸின் ஓய்வு
இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வை அறிவித்துவிட்டு, ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த டிவில்லியர்ஸ், கடந்த ஆண்டு முதல் அனைத்து விதமான கிரிக்கெட் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆர் சி பி அணியின் தூண்களில் ஒருவராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த டிவில்லியர்ஸ் இல்லாமல் இந்த ஆண்டு அந்த அணி விளையாட உள்ளது.
புதுக்கேப்டனும் டிவில்லியர்ஸும்
கோலியின் ராஜினாமாவுக்கு பிறகு இன்னும் புதிய கேப்டனை ஆர் சி பி அணி நிர்வாகம் அறிவிக்கவில்லை. வரும் 12 ஆம் தேதி இதை அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதே நாளில் டிவில்லியர்ஸ் மீண்டும் அணியில் இணைவதையும் அறிவிக்க உள்ளதாம். ஆம். அணியின் ஆலோசகராக டிவில்லியர்ஸ் நியமிக்கப்பட உள்ளாராம். இது சம்மந்தமாக கோலிதான் அணி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து அவருக்கு பொறுப்பு கொடுக்க பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோலி மற்றும் டிவில்லியர்ஸ் இடையேயான நட்பு கிரிக்கெட் உலகம் அறிந்த ஒன்று. களத்திலும் சரி, வெளியேயும் சரி இந்த இரு அதிரடி ஆட்டக்காரர்களின் நட்பு இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதைப் பலமுறை இருவருமே வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் டிவில்லியர்ஸ் அணியில் இணைய இருப்பது அந்த அணிக்கு மேலும் பலத்தைக் கொடுத்துள்ளது.