‘இனிமேல் இதெல்லாம் டெலிவரி பண்ண மாட்டோம்..’ மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜொமேட்டோ..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 12, 2019 09:17 AM

இந்து மதத்தைச் சாராதவர் கொண்டு வரும் உணவை வாங்க மாட்டேன் என வாடிக்கையாளர் ஒருவர் செய்த பிரச்சனைக்குப் பிறகு ஜொமேட்டோ தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Zomato executives on strike against delivering beef pork

இந்தியா முழுவதும் உணவு டெலிவரி செய்யும் முக்கிய நிறுவனங்களில் ஜொமேட்டோவும் ஒன்றாக உள்ளது. சில நாட்களுக்கு முன் ஜொமேட்டோ வாடிக்கையாளர் ஒருவர் டெலிவரி செய்த உணவைத் திருப்பி அனுப்பிவிட்டு, இந்து மதத்தைச் சாராதவர் கொண்டு வரும் உணவை வாங்க மாட்டேன் எனப் பதிவிட்டிருந்தார். அதற்கு ஜொமேட்டோ உணவுக்கு மதமில்லை உணவே ஒரு மதம்தான் என பதிலளித்திருந்தது.

இதைத்தொடர்ந்து பல தரப்பிலிருந்தும் ஜொமேட்டோவிற்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்நிலையில் அந்நிறுவனம் மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி டெலிவரி செய்யச் சொல்வதற்கு எதிராக  மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருக்கும் ஜொமேட்டோ ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள ஊழியர்கள், “இங்கு இந்து, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வேலை செய்கிறோம். இதில் இஸ்லாமியர்களுக்கு பன்றி இறைச்சியைக் கொண்டு செல்வதில் தயக்கம் இருக்கிறது. அதேபோல இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாட்டிறைச்சியைக் கொண்டு செல்வதில் தயக்கம் இருக்கிறது. ஆனால் இங்கு விதிக்கப்படும் பணிகளை எங்களால் மீற முடியவில்லை.  இதுதொடர்பாக மேலதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த பதிலும் இல்லை. அதனால் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி பேசியுள்ள மேற்குவங்க அமைச்சர் ராஜீவ் பானர்ஜீ, “மத ரீதியிலான நம்பிக்கை கொண்ட ஒருவரை அவருக்குப் பிடிக்காத உணவைக் கொண்டு செல்ல வற்புறுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதுபற்றி விசாரிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

Tags : #KOLKATA #ZOMATO #BEEF #PORK #RELIGION #HINDU #MUSLIM #DELIVERYBOYS #PROTEST