ரெயில்வே தேர்வு எழுதுறதுக்கு முன்னாடி.. பயோ மெட்ரிக் வெச்ச இளைஞர்.. அடுத்த செகண்ட்'ல தனியாக வந்த தோல்.. "வசமா சிக்கிக்கிட்டாரே"
முகப்பு > செய்திகள் > இந்தியாரயில்வே பணி தொடர்பாக சமீபத்தில் தேர்வு ஒன்று நடைபெற்றிருந்த நிலையில், இதற்காக இளைஞர் ஒருவர் செய்த செயல், கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.
பீகார் மாநிலம், மூங்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணீஷ் குமார். இவர் ரெயில்வே தேர்வு ஒன்றிற்காக சமீபத்தில் விண்ணப்பித்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
குஜராத் மாநிலம், வதோதரா பகுதியில் இந்த தேர்வு நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், தேர்வுக்கு செல்வதற்கு முன்பாக அதிர்ச்சி வேலை ஒன்றையும் மணீஷ் குமார் பார்த்துள்ளார்.
தேர்வு எழுதும் மையத்தில், பயோ மெட்ரிக் மூலம் தேர்வாளர்களின் கட்டை விரலில் பதிவை வைக்க வேண்டும் என்பதால், தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மணீஷ் குமார், தன்னுடைய கையில் சமையல் பேன் ஒன்றை சூடாக்கி, கட்டை விரலில் வைத்து, கொப்பளங்கள் உருவாக்கி, தோலை தனியாக எடுத்துள்ளார். அதனை தனது நண்பரான ராஜ்யகுரு குப்தா கையில் ஓட்ட வைத்து, தேர்வுக்கும் அவரை அனுப்பி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து தேர்வு எழுத சென்ற ராஜ்யகுரு குப்தா, தேர்வு எழுதுவதற்கு முன்பாக பயோ மெட்ரிக் மூலம் கட்டை விரல் பதிவை வைத்துள்ளார். ஆனால் அந்த சமயத்தில் அவர் பலமுறை முயற்சி செய்த போதும் மணீஷ் குமார் என்ற வேட்பாளரின் ஆதார் கைரேகையுடன் அவரது கட்டை விரல் ரேகை பதிவாகவில்லை என கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், மறுபுறம் ராஜ்யகுரு குப்தா தனது இடது கட்டை விரலை, பேன்ட் பாக்கெட்டுக்குள் வைத்து ஏதோ மறைத்ததை அங்கிருந்த மேற்பார்வையாளர் கவனித்துள்ளார்.
இதனால் அவருக்கு சந்தேகம் எழவே, உடனடியாக அவரது இடதுகை கட்டை விரலில் சானிடைசரை தெளித்துள்ளார். அப்போது, மேலே இருந்த தோல் விலகி வரவே, அதன் பின்னர் வசமாக சிக்கி உள்ளார் ராஜ்யகுரு குப்தா. தேர்வு மையத்தில் நடக்கவிருந்த மோசடி குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடம் வந்த போலீசார், ராஜ்யகுருவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தனது நண்பர் மணீஷ் குமார் போல தான் தேர்வு எழுத வந்த உண்மையை போலீசாரிடம் கூறி உள்ளார் ராஜ்யகுரு. அவர் நன்றாக படிப்பதால், ரயில்வே வேலைக்கு விண்ணப்பித்திருந்த மணீஷ் குமார், போலி அடையாளத்தை பயன்படுத்தி தனது நண்பரை அனுப்பி வைக்கவும் முடிவு செய்துள்ளார்.
ரெயில்வே தேர்வு எழுதுவதற்கு மோசடி வேலையில் ஈடுபட்ட ராஜ்யகுரு குப்தா மற்றும் மணீஷ் குமார் ஆகிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.