"பணம் கொடுத்தாதான் HOSPITAL-ல இடம்".. சாலையில் நடந்த பிரசவம்.. இந்தியாவை உலுக்கிய சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபீஹார் மாநிலத்தில் பணம் கொடுக்க மறுத்த கர்ப்பிணியை மருத்துவமனையில் அனுமதிக்காத ஊழியரை பணியிடை நீக்கம் செய்திருக்கிறது மருத்துவமனை நிர்வாகம்.
பீகாரில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தின் பத்தாரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசாத் ஹுசைன். இவருடைய மனைவி சாய்ரா கட்டூன். இவர் நிறைமாத கர்ப்பமாக இருந்திருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமையன்று கோரியா கோத்தி பிளாக்கிற்குட்பட்ட ஜமோ பஜாரில் உள்ள எல்ஐசி அலுவலகத்திற்கு சாய்ரா சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அங்கிருந்த பணியாளர் உதவியுடன் சாய்ரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
பணம்
அப்போது, அங்கிருந்த செவிலியர் ஒருவர் 1000 ரூபாய் பெற்றுக்கொண்டு வலியை குறைக்க உதவும் இரண்டு ஊசிகளை சாய்ராவுக்கு செலுத்தியுள்ளார். அதன்பிறகு அவர் மேலும், பணம் கேட்கவே, சாய்ரா மறுத்திருக்கிறார். இதனால் அவர் சாய்ராவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றியதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து, பிரசவ வலியால் துடித்த சாய்ரா சாலையிலேயே குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை கொந்தளிக்க செய்திருக்கிறது.
இந்நிலையில், பத்தாரா கிராம மக்கள் முகையா சவிதா சிங் தலைமையில் மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தி அதன் பிரதான கேட்டை பூட்டினர். இதுபற்றி பேசிய சவிதா,"ஒரு நோயாளிக்கு மருத்துவ சேவை வழங்க முடியாவிட்டால், மருத்துவமனையை மூட வேண்டும் " என்றார்.
விசாரணை
இந்நிலையில், இதுகுறித்து பேசிய சிவில் சர்ஜன் டாக்டர் யதுவன்ஷ் குமார் ஷர்மா, "இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, மாவட்ட திட்ட மேலாளர், செயல் தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் உள்ளூர் அதிகாரி ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழு சனிக்கிழமை அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணைக்கு பின், குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட செவிலியர் சீமா குமாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் துறை ரீதியான நடவடிக்கையையும் சந்திக்க நேரிடும்" என்றார்.
அதுமட்டும் அல்லாமல் மருத்துவ அலட்சியத்திற்கு காரணமானவர்கள் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அடுத்த 3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு விசாரணைக் குழுவிடம் கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | ஒரிஜினல் போலீஸ்கிட்டயே அபராதம்.. ஆள் தெரியாம காசு கேட்ட போலி போலீஸ்.. அடுத்து நடந்தது தான் ஹைலைட்டே..!