மேற்கு வங்கத்தில் வன்முறை.. வாக்குப்பதிவின்போது கலவரம்.. தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 18, 2019 07:00 PM

மேற்கு வங்க மாநிலம்,  டார்ஜிலிங் தொகுதியில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்ததால், போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி வன்முறையாளர்களை விரட்டியடித்தனர்.

west bengal elections violence in polling at raiganj chopra

மக்களவைத் தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு 95 தொகுதிகளுக்கு இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் டார்ஜிலிங், ராய்கன்ஞ், ஜல்பைகுரி ஆகிய 3 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. அங்குள்ள சில வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது எனப் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. மேலும் சில வாக்குச் சாவடியில் வாக்காளர்களின் பெயர் இல்லை எனப் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சோப்ரா பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் கலவரம் நடைபெற்றது. அந்த வாக்குச் சாவடியில் பொதுமக்கள் தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை எனத் தகராறு செய்ததாகத் தெரிகிறது. பின்னர் அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். மேலும் பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டது. இதற்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து நாட்டு வெடிகுண்டு வீசியதாகத் தெரிகிறது. இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இதனிடையே, ராய்கன்ஞ் பகுதியில் உள்ள சோப்ரா பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் முகமது சலிம், வாக்குப்பதிவு எவ்வாறு நடக்கிறது என்பதை ஆய்வு செய்ய வந்தார். அப்போது, சோப்ரா பகுதியில் உள்ள இஸ்லாம்பூரில் வந்த போது, திடீரென சாலையில் இருந்து மர்ம நபர்கள் சிலர், முகமது சலிம் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் அவரின் கார் கண்ணாடி உடைந்தது. வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பாதுகாப்புக்காக கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : #LOKSABHAELECTIONS2019 #WESTBENGAL #CLASH #VIOLENCE #TEARGAS #LATHICHARGE