பசியுடன் சுற்றித்திரிந்த குரங்கு.. போலீஸ் அதிகாரி காட்டிய பாசம்.. நெகிழ வைக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் பசியுடன் சுற்றித் திரிந்த குரங்கிற்கு மாம்பழத்தை கொடுக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
குரங்குகள் கிட்டத்தட்ட மனிதர்களைப் போலவே பல செயல்களை செய்பவை. குறிப்பாக பசி, கோபத்தை அவை வெளிப்படுத்தும் விதம் மனிதர்களை போலவே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் உத்திர பிரதேச மாநிலத்தில் பசியுடன் சுற்றித் திரிந்த குரங்கிற்கு அம்மாநில காவலர் ஒருவர் மாம்பலத்தை வெட்டி அளித்திருக்கிறார். இதனை ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட அது தற்போது வைரலாகி பரவி வருகிறது.
கருணை
உத்திர பிரதேச மாநிலத்தில் ஷாஜஹான்பூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பணியில் ஈடுபட்டிருந்தார் கான்ஸ்டபிள் மோஹித். அப்போது போலீஸ் ஜீப்பில் மோஹித் அமர்ந்திருக்க, அந்த இடத்திற்கு வந்த தாய் குரங்கு அங்கும் இங்கும் உணவு தேடி அலைந்திருக்கிறது.
முதுகில் குட்டியை சுமந்தபடி உணவுக்காக அலைந்து திரிந்த குரங்கை பார்த்ததும் வருத்தமடைந்த மோஹித், ஜீப்பில் தான் வைத்திருந்த மாம்பழத்தை எடுத்து அதனை வெட்டி குரங்கிடம் நீட்டியுள்ளார். பசியுடன் இருந்த அந்த குரங்கும் மாம்பழத்தை உடனேயே பெற்று சாப்பிடுகிறது. அதைத் தொடர்ந்து அங்கே நின்றிருந்த பிற குரங்குகளுக்கும் மாம்பழத்தை அளித்திருக்கிறார் மோஹித்.
வைரல் வீடியோ
இந்த நிகழ்வை உத்திர பிரதேச மாநில காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த பதிவில் காவலர் மோஹித்தின் செயல் பாராட்டுக்குரியது என்று உத்திர பிரதேச காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரையில் 60 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். 3,500 க்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.
பசியுடன் சுற்றித் திரிந்த குரங்குக்கு காவலர் ஒருவர் மாம்பழம் ஊட்டிவிடும் வீடியோ பலதரப்பு மக்களையும் நெகிழ வைத்திருக்கிறது. இருப்பினும் குரங்குகளுக்கு இப்படி உணவளிப்பது சில நேரங்களில் அவற்றின் உடல்நலத்துக்கு தீங்காக அமையும் எனவும் சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
UP 112, सबके ‘Mon-key’ समझे..
Well Done Constable Mohit, PRV1388 Shahjahapur for making good deeds an 'Aam Baat' #PyarKaMeethaPhal#UPPCares pic.twitter.com/z2UM8CjhVB
— UP POLICE (@Uppolice) June 12, 2022