"உங்களைத்தான் நம்பி இருக்கேன்".. தனியாளாக காவல்நிலையத்துக்கு போன சிறுவன்.. புகாரை கேட்டு அதிர்ந்துபோன போலீசார்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானாவில் தினமும் மது அருந்திவிட்டு வந்து தனது அம்மாவை அடிப்பதாக தந்தை மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் 7 வயது சிறுவன்.

மதுப் பழக்கம் சமூகத்தில் பெரும் தீமைகளுக்கு காரணமாக அமைகிறது. குறிப்பாக குடும்ப உறவுகளில் ஏற்படும் பல சிக்கல்களுக்கு மதுவிற்கு அடிமையான குடும்ப உறுப்பினர்கள் பல நேரங்களில் முதன்மை காரணமாக அமைந்து விடுகின்றனர். இது குடும்ப உறவுகளை சிதைப்பதோடு, வீட்டில் உள்ள குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானாவில் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
புகார்
தெலுங்கானாவில் முஸ்தபாத் நகரை சேர்ந்த சிறுவன் சுங்கபதி பாரத். இவருடைய தந்தை பாலகிருஷ்னன். தாய் தீபிகா. பாரத் அருகில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பாரத் காவல் நிலையத்துக்கு சென்றிருக்கிறார். தனியாளாக காவல் நிலையத்துக்கு வந்திருந்த சிறுவனை கண்டதும் சந்தேகம் அடைந்த உதவி காவல்துறை ஆய்வாளர் வெங்கடேஷ்வர்லு பாரத்தை அருகில் அழைத்து விபரத்தை கேட்டிருக்கிறார். அப்போது தனது தந்தை பாலகிருஷ்ணன் தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து தாயை தாக்கி வருவதாகவும் தனக்கு அச்சமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் பாரத்.
எச்சரிக்கை
மேலும், "உங்களை நம்பி வந்திருக்கிறேன். தயவு செய்து எனது தாயை காப்பாற்றுங்கள்" என உருக்கத்துடன் சிறுவன் கூறியதை கேட்டு கலங்கிப்போன உதவி ஆய்வாளர் வெங்கடேஷ்வர்லு, சிறுவனின் பெற்றோரை காவல் நிலையத்துக்கு அழைத்திருக்கிறார். அப்போது இருவருக்கும் ஆலோசனைகளை வழங்கிய அவர், பாலகிருஷ்ணனிடம் மீண்டும் இதுபோல நடந்துகொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து அனுப்பியுள்ளார். மேலும், யாருடைய துணையும் இன்றி தனியாளாக காவல் நிலையத்துக்கு துணிச்சலுடன் வந்து தந்தை மீது புகார் அளித்த பாரத்தை போலீசார் பாராட்டியதுடன் நன்கு படிக்குமாறும் வாழ்த்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.
Also Read | பேச மறுத்த பக்கத்து வீட்டுப்பெண்... போன்லையும் பிளாக்.. இளைஞர் செஞ்ச பயங்கரம்... தட்டிதூக்கிய போலீஸ்..!

மற்ற செய்திகள்
