அம்மாவுக்கு அங்கன்வாடி வேலை.. பையனுக்கு ரூ.1.8 கோடி சம்பளத்துல வேலை.. ஃபேஸ்புக், அமேசான், கூகுள்-ல இருந்து வந்த வேற லெவல் ஆஃபர்...
முகப்பு > செய்திகள் > இந்தியாகொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர் பிசாக் மொண்டல்.
இவர் கல்லூரி படிப்பை முடிக்க, இன்னும் ஒரு செமஸ்டர் மீதம் இருக்கும் நிலையில், அவருக்கு பிரபல முன்னணி நிறுவனங்களிடம் இருந்து, பணி நியமன ஆணை வந்திருக்கும் தகவல், ஏராளமானோரை வியந்து பார்க்கச் செய்துள்ளது.
கூகுள், அமேசான், ஃபேஸ்புக் என மூன்று பெரிய நிறுவனங்களில் இருந்து, பிசாக் மொண்டலுக்கு பணி நியமன ஆணை வந்துள்ளது. இதில், அமேசான், கூகுளை விட ஃபேஸ்புக் நிறுவனம், அதிக ஊதியம் தர முன் வந்துள்ளதால், அங்கு பணியில் சேர, பிசாக் முடிவு செய்துள்ளார்.
மாணவர் பிசாக் மொண்டலுக்கு ஃபேஸ்புக் நிறுவனம், ஓராண்டுக்கு தர முன் வந்துள்ள ஊதியம் 1.8 கோடி ரூபாய் ஆகும். ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், இந்தாண்டில் பெறும் மிக உயர்ந்த ஊதியம் இதுவாகும்.
ஃபேஸ்புக் நிறுவனத்தில் வேலை..
ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணிக்கு சேருவதற்காக இந்தாண்டு செப்டம்பர் மாதம், லண்டனுக்கு செல்லவுள்ளார் பிசாக். தனக்கு வந்த ஆஃபர்கள் குறித்து பேசும் பிசாக், "ஃபேஸ்புக் நிறுவனத்தில் வரும் செப்டம்பர் மாதம் நான் பணியில் சேர உள்ளேன். இதற்கு முன்பாக, கூகுள் மாற்றம் அமேசான் நிறுவனத்திடம் இருந்து வேலைக்கான வாய்ப்புகள் வந்தது. ஆனால், அவற்றை விட ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஊதியம் அதிகமாக இருந்ததால் நான் அதனை தேர்வு செய்தேன்.
அந்த இரண்டு வருசத்துல..
கொரோனா தொற்று உருவான கடந்த இரண்டு ஆண்டுகளின் போது, பல சிறந்த நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதன் மூலம், நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டு, எனது அறிவை வளர்க்கும் வாய்ப்பினை பெற்றிருந்தேன். இதன் காரணமாக, நேர்முகத் தேர்விலும் என்னால் வெற்றி பெற முடிந்தது" என பிசாக் மொண்டல் தெரிவித்துள்ளார்.
சாதாரண குடும்பம்
பெங்காலின் பிர்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த பிசாக் மொண்டல், ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். அங்கன்வாடி ஊழியரான பிசாக்கின் தாயார், மகனுக்கு கிடைத்த வேலை பற்றி பேசுகையில், "இது எங்களுக்கு மிகவும் பெருமையான விஷயம். அவர் சிறு வயதில் இருந்தே நன்றாக படிக்கக் கூடியவர். உயர்நிலைத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வு உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்டதால், அவருக்கு ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது" என தெரிவித்துள்ளார்.
அதே போல, ஜாதவ்பூர் பல்கலைக்கழக வேலை வாய்ப்பு அதிகாரி சமிதா பட்டாச்சார்யா இது பற்றி பேசுகையில், "தொற்று நோய் காலகட்டத்திற்கு பிறகு, இவ்வளவு பெரிய அளவிலான சர்வதேச வேலை வாய்ப்பினை மாணவர் பெறுவது இதுவே முதல் முறை" என தெரிவித்துள்ளார்.
கல்லூரி படிப்பை முடிக்கும் முன்னரே, தன்னுடைய திறமையால் முன்னணி நிறுவனமான ஃபேஸ்புக்கில் பணிபுரியும் வாய்ப்பினை பெற்ற மாணவர் பிசாக்கை பலரும் பாராட்டி வருகின்றனர்.