இந்தியாவில் கொரோனா 'மூன்றாவது அலை' எப்போது...? - 'அதிர்ச்சி' தகவலை வெளியிட்ட IIT விஞ்ஞானி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉருமாறிய கொரோனா தொற்று மூன்றாவது அலையாக அக்டோபருக்குள் தாக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்து சொல்லியிருந்தனர்.
அதன்படி மூன்றாவது அலை தாக்கவில்லை. இந்நிலையில் வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் ஓமிக்ரான் வைரஸ் தொற்றுடன் மூன்றாவது அலை உச்சத்தை எட்டும் என்று கொரோனா வைரஸ் கணிப்பு வியூக நிபுணரும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன விஞ்ஞானியுமான மனிந்திரா அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்
இதுகுறித்து அவர் கூறுகையில், 'தற்போதைய கணிப்பு படி புதிய வைரசுடன் வருகிற (2022) பிப்ரவரிக்குள் மூன்றாவது அலை உச்சத்தை எட்டும். அப்போது நாட்டில் தினமும் 1 லட்சம் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம். ஆனால் இது இரண்டாவது அலையை விட மிதமானதாகவே இருக்கும்.
தற்போதைய ஓமிக்ரான் வைரஸ் அதிக பரவும் தன்மையை கொண்டது போல் தெரிகிறது. ஆனால் அதன் தீவிரம் டெல்டா வைரஸில் இருந்தது போல் தெரியவில்லை. அன்றாடம் ஒரு லட்சம் முதல் 1.5 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம்.
இந்தநிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தற்போது வரை இந்த தொற்று தென் ஆப்பிரிக்காவில் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யவில்லை. ஆனால், அங்கு வைரஸ் தொற்று பரவல் மற்றும் மருத்துவமனை நோயாளிகள் சேர்க்கை போன்ற தரவுகள் நமக்கு தெளிவான முடிவு எடுக்க உதவும்.
மேலும், டெல்டா பரவலின்போது கடைபிடிக்கப்பட்டது போல், இரவு நேர ஊரடங்கு போல் மிதமான ஊரடங்கு, கூட்டங்களுக்குத் தடை விதிப்பது ஆகியனவற்றைக் கடைபிடித்தால் பரவல் உச்சம் தொடுவதைத் தவிர்க்கலாம் என கூறியுள்ளார்.
இந்தியாவில் இதுவரை 23 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 10 பேருக்கு ஓமிக்ரான் உறுதியாகியுள்ளது.