'இரண்டு வருட பிளான்'... 'முகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி திட்டம்'... நேரடியாக களத்தில் இறங்கும் இளைய மகன்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ், உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவை நிறுவத் திட்டமிட்டுள்ளது.
ரிலையன்ஸ் கார்ப்பரேட் விவகார இயக்குநர் பரிமல் நாத்வானி இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ''குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் அதிக வகை விலங்குகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவை நிறுவ ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை 280 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவ ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது. கொரோனா காரணமாக இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது''என அவர் கூறியுள்ளார்.
இதனிடையே இந்தத் திட்டத்தை முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த அம்பானி செயல்படுத்த உள்ளதாகவும், இந்த பூங்கா இன்னும் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பேசிய குஜராத் கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.கே தாஸ், ''உலகின் மிகப் பெரிய சிலை குஜராத்தில் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். இப்போது எண்ணிக்கையிலும், வகைகளிலும் அதிக அளவு விலங்குகளைக் கொண்ட உயிரியல் பூங்கா ஜாம்நகரில் நிறுவப்பட உள்ளது'' எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையே இந்தியா டுடே நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலில், ''மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் வெளியிட்ட தகவல்களிலிருந்து இந்த உயிரியல் பூங்கா, 'பசுமை விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு ராஜ்ஜியம்' என அழைக்கப்படவுள்ளது. உலக அளவிலுள்ள அனைத்து பறவைகள் மற்றும் விலங்குகள், தவளை வீடு, ட்ராகன் பூமி, பூச்சிகள் இடம், நீர்வாழ் ராஜ்ஜியம், இந்தியக் காடுகள், மேற்கு சதுப்புநில உயிரிகள், இந்தியப் பாலைவன உயிரிகள் மற்றும் வெளிநாட்டுத் தீவு உயிரிகள் என பல்வேறு வகைகளாகப் பிரித்து வகைப்படுத்தவுள்ளதாக மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் திட்டமிட்டுள்ளதாக'' தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவாக அமையவிருக்கும் இதில், ஆப்பிரிக்க சிங்கம், சிறுத்தை, ஜாகுவார், இந்திய நரி, ஆசியச் சிங்கம், மனிதக் குரங்கு, பூனை, கரடி இனங்கள், வங்கப்புலி, கொரில்லா, வரிக்குதிரை, ஆப்பிரிக்க யானைகள் எனப் பல்லாயிரக்கணக்கான விலங்குகள் இடம்பெறவுள்ளன.