'அடிச்சாரு பாருயா ஆர்டர்'... 'இனி செப்டிக் டேங்க்குள்ள நீங்க கால் வைக்கக் கூடாது'... அதிரடியாக அறிவித்த மாநிலம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதூய்மைப் பணியாளர்கள் கழுவுநீர் தொட்டிக்குள் இறங்கி தூய்மை செய்வதும், அப்போது விஷவாயு தாக்கி உயிரிழப்பது என்பதும் அடிக்கடி நடைபெறும் துயரமாக மாறிப் போனது. தற்போது அதற்கு முடிவு கட்ட ராஜஸ்தான் அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''ராஜஸ்தானில் தூய்மைப் பணியாளர்கள் யாரும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிப் பணி செய்யவில்லை என்பதை அனைத்து மாவட்ட மாஜிஸ்திரேட்களும் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். அந்த பணிகள் அனைத்தும் இயந்திரங்கள் கொண்டு மட்டுமே செய்ய வேண்டும். கழிவுநீர் தொட்டிக்குள் மரணம் என்பது நிகழ்வே கூடாது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
தூய்மை பணியாளர்களின் அர்ப்பணிப்பால் கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதில் வெற்றி பெற்றுள்ளோம். மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் காவல்துறையினரின் முயற்சி கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், நாட்டில் ராஜஸ்தானின் அந்தஸ்தையும் மரியாதையையும் உயர்த்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ராஜஸ்தான் மாநில அரசின் உத்தரவு, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தூய்மை பணியாளர்களின் வாழ்க்கையில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனப் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.