'சல்லடை போட்டு தேடியாச்சு...' 'வீட்டுக்குள்ள எதுவுமே சிக்கல...' அப்போ தோட்டத்துல...? - தோண்டத்தோண்ட வந்துக்கிட்டே இருக்கு...!
முகப்பு > செய்திகள் > இந்தியா44 வயதான ஆறுமுகம் என்பவர் புதுச்சேரி அருகே கிராமப்பகுதியான ஆண்டியார்ப்பாளையத்தில் தையல் தொழில் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் கள்ள சாராயம் விற்கும் விபரீத தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
ஆறுமுகம் செய்து வந்த கள்ளச் சாராய விற்பனை, போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், மேற்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் தலைமையில் ஆய்வாளர் கணேசன் மற்றும் போலீஸார் மதகடிப்பட்டில் உள்ள ஆறுமுகத்தின் மாமனார் பழனி என்பவர் வீட்டில் நேற்று சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது அவர் வீட்டிற்குள் ஏதும் சிக்கவில்லை. ஆனால் பழனியின் வீட்டுத் தோட்டத்தில் இருந்த குழியிலும் சொகுசு கார் ஒன்றிலும் எரி சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
அதோடு 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுமார் 119 கேன்களில் இருந்த 4,165 லிட்டர் எரி சாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 25 லட்சம் இருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மாமனார் பழனியை மாட்டிவிட்டு, டெய்லர் ஆறுமுகம் தலைமறைவாகி விட்டதாகவும் அவரைத் தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். மேலும் அங்கு பறிமுதல் செய்யப்பட்ட எரி சாராயம், கார், பைக் ஆகியவற்றை போலீஸார் கலால் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.