‘இந்த முறையும் அதை தவறவிட்ட தேமுதிக’.. அனைத்து தொகுதியிலும் பின்னடைவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | May 23, 2019 08:24 PM
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து களமிறங்கிய தேமுதிக அனைத்து தொதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.
கடந்த 2006 -ம் ஆண்டு முதல் முதலாக தேர்தல் களம் கண்ட தேமுதிக அப்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கியது. அதில் விருத்தாசலம் தொகுதியில் களமிறங்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமோகமாக வெற்றி பெற்றார். அதனை அடுத்து நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. ஆனால் அந்த தேர்தலில் அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தாலும், 10.3 சதவீதம் வாக்குகளைப் பெற்று தேமுதிக அசத்தியது.
இதனை அடுத்து 2011 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதல் முதலாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக தேர்தல் களம் கண்டது. அதில், 29 தொதிகளை கைப்பற்றி எதிர்கட்சியாக உருவெடுத்தது. அடுத்து 2014 -ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அதில் 5.1 சதவிதமாக வாக்குகள் சரிவை சந்தித்தது.
இதனைத் தொடர்ந்து 2016 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்த தேமுதிக தோல்வியை தழுவியது. தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து நான்கு தொகுதியில் போட்டியிட்டது. ஆனால் களமிறங்கிய நான்கு தொகுதியிலும் தேமுதிக பின்னடைவையே சந்தித்துள்ளது.