ஒருலிட்டர் பெட்ரோல் வெறும் 1 ரூபாய்..உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த இந்திய நகரம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிர மாநிலம் அருகே ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் இணையதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் அருகே தனியார் அமைப்பு ஒன்று 500 அதிர்ஷ்டசாலி நபர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ஒரு ரூபாய்க்கு வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி நேற்று குறிப்பிட்ட பெட்ரோல் பங்க் அருகே கூட்டம் அலைமோதியது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்த நூதன திட்டத்தை செயல்படுத்தியதாக அந்த தனியார் அமைப்பினர் தெரிவித்திருக்கின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் மதிப்பு அதிகரித்து வருகிறது. 2008 ஆம் ஆண்டு சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில் இருந்ததைப் போல தற்போதும் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி உயர்ந்து வருகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்துமே பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்து வருகின்றன. எரிபொருள் உயர்வு காரணமாக நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிப்பதாகவும், இதனால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதாகவும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
மகிழ்ச்சி
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பினர் தெரிவித்திருந்தனர். இது குறித்து பேசிய அந்த அமைப்பின் உறுப்பினர் மகேஷ் சர்வகோடா "நாட்டின் பணவீக்கம் கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது. பெட்ரோல் விலை 120 ரூபாயை தொட்டுவிட்டது. ஆகவே அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் பொதுமக்கள் சிலருக்கு மகிழ்ச்சி அளிக்கலாம் என்ற நோக்கில் இந்த முடிவை எடுத்தோம். ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் தர முடிவெடுத்தோம்" என்றார்.
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.