ஆச்சரியமா இருக்கே... தடுப்பூசி போட்டவருக்கு குணமடைந்த பக்கவாதம்... உண்மை என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, பேச முடியாமல் தவித்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 55 வயது நபர், கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர் தனக்கு நோய் பாதிப்பு சரியாகிவிட்டதாக சொல்கிறார்.

ஜார்கண்ட் மாநிலம் போகாரோவின் சல்காதி கிராமத்தைச் சேர்ந்தவர் துலார்சந்த். அவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விபத்தில் சிக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். பக்கவாத நோய் வந்ததிலிருந்து அவரால் பேச முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அவருக்கு கடந்த ஜனவரி 4 ஆம் தேதி கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து நோய் பாதிப்பு முற்றிலும் நீங்கி பழைய ஆளாக மாறியுள்ளாராம் துலார்சந்த்.
இது குறித்து அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்ததாவது, ‘கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. ஜனவரி 4 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர் பக்கவாத நோயால் செயலற்றுக் கிடந்த என் கால்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின. வெகு நாட்களாக பேச்சு வராமல் தவித்த என் குரலும் வெளிப்பட்டது. இது எனக்கு மிகவும் உணர்ச்சிப் பூர்வமான நிகழ்வாகும்’ என்று கூறுகிறார்.
போகாரோவைச் சேர்ந்த மருத்துவர் ஜித்தேந்திர குமார், துலார்சந்த் திடீரென்று எழுந்து நடந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார். அவர் அரசு நிர்வாகத்தை, துலார்சந்தின் உடல்நல வலலாறு குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தி உள்ளார்.
அவர், ‘இதைப் பார்க்க எனக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் என்ன நடந்தது என்பது குறித்து விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க வேண்டும். சில நாட்களாக அவர் நோய்வாய்ப்பட்டு குணமடைந்தார் என்றால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை தான். ஆனால், பல ஆண்டுகளாக இருந்த உடல்நல பாதிப்பு தடுப்பூசி எடுத்தப் பின்னர் திடீரென்று சரியாகிறது என்றால் அதை நம்ப முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
வரும் நாட்களில் துலார்சந்தின் உடல்நலன் குறித்தும் அவர் எப்படி குணமடைந்தார் என்பது குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டு முறையான முடிவுகள் வெளிக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
