9.5 டன் எடையில் உருவாக்கப்பட்ட அசோக சின்னம்.. நெகிழ்ச்சியுடன் திறந்து வைத்த பிரதமர் மோடி.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய சின்னத்தை இந்திய பிரதமர் திறந்து வைத்துள்ளார்.
Also Read | லட்சக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு இடையே தகனம் செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உடல்..!
புதிய நாடாளுமன்ற கட்டிடம்
இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்ற கட்டிடம் அமைக்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. 971 கோடி ரூபாய் செலவில் 62,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், மக்களவையில் உள்ள 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் மற்றும் கூட்டு கூட்டத்திற்கு தேவையான 1, 272 இடங்களும் அமைக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதனை தாக்குப்பிடிக்கும் வகையில் இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தேசிய சின்னம்
இந்த கட்டிடத்தின் மைய முகப்பின் உச்சியில் தேசிய சின்னம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. 19.6 அடி உயரம் கொண்ட இந்த பிரம்மாண்ட சின்னத்தை 9,500 கிலோ எடை உள்ள வெண்கலத்தால் கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த பணிகள் கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் இந்த அசோக சக்கரத்தை தாங்கும் பீடம் மட்டுமே 6.5 எடையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதீத எடை காரணமாக இந்த சின்னங்கள் 150 பாகங்களாக தனித்தனியாக தயாரிக்கப்பட்டு அவற்றை பொருத்தும் பணிகள் ஏப்ரலில் துவங்கின. இந்நிலையில் சமீபத்தில் இந்த பணிகள் முழுவடைந்ததை முன்னிட்டு நேற்று முன்தினம் நரேந்திர மோடி இந்த சின்னத்தை திறந்து வைத்தார்.
பூஜை
புதிதாக கட்டப்பட்ட தேசிய சின்ன திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆகியோரும் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அசோக சின்னத்தை திறந்து வைத்த மோடி, அதனை நெகிழ்ச்சியுடன் தொட்டு வணங்கினார். அதன்பிறகு, இந்த சின்னத்தை உருவாக்கிய கலைஞர்களை சந்தித்த மோடி, அவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.
இதன்மூலம் வரும் நவம்பரில் நடக்க இருக்கும் குளிர்கால கூட்டத்தொடர் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது இதனிடையே இந்த சிலையின் வடிவமைப்பு குறித்து பலரும் வைரலாக பேசி வருகின்றனர்.